கவலைப்படாதீங்க.. டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்ற முடியும்.. புதிய வாய்ப்புகள் பிறக்கும்.. மோடி பேச்சு
டெல்லி : மத்திய பட்ஜெட் 2022ல் முன்மொழியப்பட்ட டிஜிட்டல் கரன்சி பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், இது போன்ற டிஜிட்டல் கரன்சிகள் ஃபின்டெக் துறையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Recommended Video
நாடாளுமன்றத்தில் 2022 - 2023ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை சுமார் 90 நிமிடங்களில் தாக்கல் செய்தார் நிர்மலா
பல்வேறு புதிய அறிவிப்புகள் அதில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பம், தபால் நிலையங்களில் கோர் பேங்கிங் சேவை, டிஜிட்டல் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி
குறிப்பாக, ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏற்கனவே பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகள் உள்ள நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு கவனத்திற்குள்ளானது.

பணமாக மாற்றலாம்
இந்நிலையில் மத்திய பட்ஜெட் 2022ல் முன்மொழியப்பட்ட டிஜிட்டல் கரன்சி பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், இது போன்ற டிஜிட்டல் கரன்சிகள் ஃபின்டெக் துறையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஏற்பாடு செய்த 'ஆத்மநிர்ப அர்த்தவ்யவஸ்தா' என்ற தலைப்பில் நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

பிரதமர் பேச்சு
நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் அல்லது டிஜிட்டல் ரூபாய் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து இல்லாததாகவும் மாற்றும் மற்றும் வரும் ஆண்டுகளில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றார். "டிஜிட்டல் ரூபாய் என்பது தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாயின் டிஜிட்டல் வடிவமாக இருக்கும், மேலும் இது ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும். இது டிஜிட்டல் கரன்சியுடன் இயற்பியல் நாணயத்தை பரிமாற்றம் செய்யும் ஒரு அமைப்பாக இருக்கும்" என்றும் பிரதமர் கூறினார்.

டிஜிட்டல் பொருளாதாரம்
பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்ட மெய்நிகர் கருத்தரங்கில் தொடர்ந்து பேசிய பிரதமர், "மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC) டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும், யாரேனும் டிஜிட்டல் கரன்சியில் பணம் செலுத்தினால், அதை பணமாக மாற்ற முடியும் என்று கூறினார். CBDCயின் துவக்கமானது டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றத்தை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து இல்லாததாகவும் மாற்ற வழிவகுக்கும் எனவும், உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளின் வளர்ச்சியை எளிதாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.

புரட்சியை ஏற்படுத்தும்
டிஜிட்டல் ரூபாய் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் ஃபின்டெக் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், பணத்தை கையாளுதல், அச்சிடுதல், தளவாட மேலாண்மை ஆகியவற்றில் சுமையை குறைக்கும் என்று கூறிய பிரதமர், பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 2022-23 ஆம் ஆண்டில் இந்தியா 'டிஜிட்டல் ரூபாயை' அறிமுகப்படுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததை சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications