ஜி20 மாநாடு: இந்தோனேசியா டூ இந்தியா.. பறந்து வரும் மோடி! அடுத்தடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள்
டெல்லி: டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டையொட்டி இந்தோனேசியாவில் இருந்து பிரதமர் மோடி இன்று விமானத்தில் பறந்து வருகிறார். அதன்பிறகு உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடுகளும் உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தோனேசியா தலைமையேற்று நடத்தியது.

அதன்பிறகு ஜி20 உச்சி மாநாட்டுக்கான தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் 2 நாட்கள் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இங்கு மாநாட்டுக்கான அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டவர்கள் நாளை இந்தியா வர உள்ளனர்.
இந்நிலையில் தான் ஜி20 மாநாட்டுக்கான ஏற்பாடுகளை இன்று பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இந்தோனேசியாவில் இருந்து பிரதமர் மோடி டெல்லிக்கு விமானத்தில் விரைகிறார். இந்தோனேசியாவில் ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்ற நிலையில் அவர் இந்தியாவுக்கு விமானத்தில் பறந்து வருகிறார்.
இதையடுத்து சுஷ்மா சுவராஜ் பவனில் கேபினட் அமைச்சர்களை சந்தித்து ஜி20 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பற்றி கேட்டறிகிறார். அதன்பிறகு அவர் ஜி20 மாநாடு குறித்து முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க இருக்கிறார். ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பிரதமர் மோடி அறிவுரை வழங்க உள்ளார்.
இந்த மாநாட்டில் ஜி 20 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் தவிர 30க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள், அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications