நேரு குடும்பம் மீது அவதூறு.. பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை இல்லை.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
டெல்லி: எங்கள் குடும்பத்தை அவமதித்த பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என யாருக்கும் சிறை தண்டனை விதிக்க எந்த நீதிபதியும் உத்தரவிடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையானது.
மோடி பெயர் குறித்து விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துவிட்டதாக கூறி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற தீர்ப்பு
இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராகுல் காந்தி மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உத்தரவிட்டார். இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ராகுல் காந்தி தகுதிநீக்கம்
அத்துடன், குற்ற வழக்கில் மக்கள் பிரதிநிதி ஒருவர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது பதவி பறிக்கப்படும் என்பதால், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

காங்கிரஸ் கட்சி ஆலோசனை
இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். அதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரியங்கா காந்தி பேட்டி
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாகவும், மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி கூறுகையில், ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்பியதால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். நாங்கள், நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

பிரதமரே அவதூறு பேசினார்
போர்களை கண்டு அஞ்சி தப்பி ஓட மாட்டோம். ராகுல் காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் அனைவரும் எதிர்த்து போராடுவோம்.
பாஜக செய்தித் தொடர்பாளர்கள், எம்பி-க்கள், அமைச்சர்கள், அவ்வளவு ஏன் பிரதமர் மோடியே எனது சகோதரர், தந்தை, தாய், இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு என எங்களின் குடும்பத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது முழு நாட்டிற்கும் தெரியும்.

என் சகோதரர் என்ன செய்தார்?
ஆனால் எந்த நீதிபதியும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவில்லை, எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் இல்லை. இவையெல்லாம் ஏன் நடக்கிறது. எனது சகோதரர் என்ன செய்தார்? அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதுதான் இதெற்கெல்லாம் காரணம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications