மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்- பஞ்சாப் அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்!
மாநில அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
டெல்லி: மாநிலங்களின் ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் என பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 3-ந் தேதி கூட்டுவதற்கு மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதுவரை மாநில சட்டசபையை கூட்டுவதற்கான அனுமதியை வழங்கவில்லை. இது தொடர்பாக மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இடையே கடிதப் போர் நடைபெற்றும் வருகிறது.
மேலும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த முக்கிய கருத்துகள்:
அரசியல் சாசனத்தின் 167-வது பிரிவின் கீழ் மாநில அரசிடம் இருந்து தகவல்களைக் கேட்பதற்கு ஆளுநருக்கு உரிமை உண்டு. மாநில அரசுகளும் ஆளுநருக்கு அவர் கேட்கும் தகவவல்களைத் தர வேண்டியது அவற்றின் கடமை.
அதேநேரத்தில் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் கூட்டி சட்டசபையை கூட்டுவது என முடிவு செய்தால் அந்த முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர். அதாவது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்.
தாம் கேட்கும் விவரங்களை தரவில்லை என கூறி ஆளுநர் தமது அரசியல் சாசன கடமையை நிறைவேற்ற தவற கூடாது. ஜனநாயகத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். பல முரண்பாடுகள் இருக்கலாம். அரசியல் சாசனப் பொறுப்பில் இருப்பவர்கள் பண்பட்ட முறையில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆகையால் சட்டசபையை மாநில அமைச்சரவை முடிவு செய்த தேதியில் கூட்டுவதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். இதனையடுத்து மாநில அமைச்சரவை முடிவின் படி மார்ச் 3-ந் தேதி பஞ்சாப் சட்டசபையை கூட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்துள்ளார் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications