ஷூவை தொலைத்த சிறுமி.. அப்படியே.. தோளில் தூக்கி நடந்த ராகுல்.. வாவ்.. யாத்திரையில் நெகிழ்ச்சி சம்பவம்
டெல்லி: பாரத் ஜடோ யாத்திரையில் தனது ஷூவை தொலைத்த சிறுமியை ராகுல் காந்தி தோளில் துக்கி சுமந்து சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாஜகவின் கொள்கைகளை எதிர்த்தும், எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜடோ யாத்திரையை தொடங்கினார். இப்பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையானது கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என 12 மாநிலங்கள் வழியாக சுமார் 150 நாட்கள் பயணித்து காஷ்மீர் சென்றடைய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதுவரை சுமார் 9 மாநிலங்கள் 46 மாவட்டங்கள் என மொத்தம் 3,000 கி.மீ தொலைவை யாத்திரை கடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் இந்த யாத்திரை தனது 100வது தினத்தை நிறைவு செய்தது. இதனையடுத்து 108வது நாளில் டெல்லியில் நுழைந்தது. இதில் ராகுல் காந்தியுடன் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இது டெல்லியை ஒரு உலுக்கு உலுக்கியது.

ஆதரவு
இந்த பயணத்தில் ஏராளமான அரசியல் கட்சியினர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் சிறிது தூரம் யாத்திரையில் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவளித்தனர். இப்பயணம் டெல்லியில் ஒன்பது நாட்கள் வரை நீடிக்கிறது. நேற்று இப்பயணத்தில் பங்கேற்றிருந்த சிறுமி ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி தனது ஷூவை தவறவிட்டுவிட்டார். அவரால் அதனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே வெறும் கால்களுடன் நடக்க தொடங்கினார்.

உற்சாகம்
இதனை கண்ட ராகுல் காந்தி அவரை அருகில் அழைத்து என்ன விஷயம் என்று கேட்க, சிறுமி ஷூ தொலைந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து அவர் சிறுமியை தோளில் தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கிவிட்டார். இதனை கண்ட தொண்டர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். பின்னர் உற்சாகத்துடன் நடக்கத் தொடங்கினர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஒருபுறம் இப்பயணம் உற்சாகமாக இருந்தாலும் மறுபுறம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கடிதம்
சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாற்றம் அடைந்த பிஎஃப்-7 வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் சிலருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில் விமானம் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவிகிதம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இந்நிலையில் பாரத் ஜடோ யாத்திரையில் அதிகமானோர் பங்கேற்றுள்ள நிலையில் இந்த யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு ராகுல் காந்திக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தது.

பயம்
ஆனால் இதற்கு காங்கிரஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. அதாவது, பாஜக இந்த யாத்திரையை கண்டு பயந்துள்ளதாகவும் குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ராகுல் காந்தியின் யாத்திரையை கண்டு பயந்துள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். மேலும் யாத்திரையை தள்ளி வைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும், காரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றப்படும் என்றும் காங்கிரஸ் மத்திய அரசுக்கு பதிலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications