மோடி ஆட்சியில் கல்வித் துறை சீரழிவால் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைப்பு.. ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி: பிரதமர் மோடி ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்துவிட்டது என்பதையே இன்றைய முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பும் வெளிப்படுத்துவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வில் முறைகேடு, யுஜிசி நெட் தேர்வுகள் ரத்து, தற்போது முதுநிலை நெட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியாக சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபப்ட்டுள்ளனர். தற்போது நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உதவிப் பேராசிரியர்களுக்கான நெட் தேர்விலும் முறைகேடுகள் நடந்தது. இதனால் நெட் தேர்வு நடந்த மறுநாளே அத்தேர்வை ரத்து செய்தது மத்திய அரசு.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசியத் தேர்வு முகமை நேற்று அறிவித்தது. முதுநிலை நீட் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்புக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இப்போது நீட் முதுநிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் ஆட்சியில் சீர்கேடடைந்த கல்வி முறைக்கு இது மற்றொரு துரதிர்ஷ்டவசமான உதாரணம்.
பா.ஜ., ஆட்சியில், மாணவர்கள், 'படிக்க' கட்டாயப்படுத்தப்படாமல், தங்களது எதிர்காலத்தைக் காப்பாற்ற, அரசுடன் 'போராட' வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போது புரிகிறது - ஒவ்வொரு முறையும் இந்த சம்பவங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த மோடி, வினாத்தாள் கசிவு மோசடி மற்றும் கல்வி மாஃபியாவின் முன் முற்றிலும் செயலற்றவராக உள்ளார். நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது - அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் என சாடியுள்ளார்.
முன்னதாக நீட், நெட் தேர்வுகளை நடத்துகிற தேசியத் தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு நீக்கியது. அத்துடன் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications