‛‛இனி ரேபரேலி தான் அடையாளம்’’.. வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்! களமிறங்கும் பிரியங்கா
டெல்லி: லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் வயநாடு எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மக்களவை செயலகம் ஏற்றுள்ள நிலையில் ராகுல் காந்தி இனி ரேபரேலி தொகுதி எம்பியாக தொடர உள்ளார். மேலும் ராகுலுக்கு பதில் அவரது தங்கை பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் களமிறங்க உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளில் வென்றது. இதையடுத்து பாஜக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் 52 பேர் உதவியுடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார்.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் ஒரு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த தொகுதியின் எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று ராகுல் காந்தி அறிவித்தார். மாறாக உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியின் எம்பி பதவியை தக்கவைப்பதாக அறிவித்தார்.
இதுதொடர்பான அறிவிப்பை நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் தங்கை பிரியங்கா காந்தி ஆகியோருடன் சேர்ந்து ராகுல் காந்தி வெளியிட்டார். இந்நிலையில் தான் வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி சார்பில் மக்களவை செயலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது. இந்த கடிதத்தை மக்களவை செயலகம் ஏற்று கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளதாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை 99ல் இருந்து 98 ஆக சரிந்துள்ளது. மேலும் வயநாடு தொகுதிக்கு இன்னும் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் களமிறங்கவில்லை. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். இதன்மூலம் அவர் முதல் முறையாக தேர்தல் களத்தை வேட்பாளராக சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications