"நரேந்திர மோடி வெறும் பில்டப் மட்டுமே.! அவருக்கு தைரியமே இல்லை.." ஒரே போடாக போட்ட ராகுல் காந்தி
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று ஓபிசி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது ஓபிசி மக்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க காங்கிரஸ் தவறிவிட்டதாக ராகுல் காந்தி சாடினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பெரிய பிரச்சினையே இல்லை என்றும் அவருக்குத் துணிச்சல் இல்லை என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
தலைநகர் டெல்லியில் ஓபிசி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ராகுல் காந்தி, பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி வெறும் பில்டப் மட்டுமே என்றும் அவரிடம் எந்தவிதமான "உண்மையும்" இல்லை என்றும் விமர்சித்துள்ளார். மோடிக்கு அதிக முக்கியத்துவம் திட்டமிட்டுக் கொடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோடிக்கு தைரியம் இல்லை
பிரதமர் மோடியை இரண்டு, மூன்று முறை சந்தித்துப் பேசிய பிறகு, மோடி ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்பதை உணர்ந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் மோடிக்கு தைரியம் இல்லை என்றும் ஊடகங்கள் தான் மோடியை அளவுக்கு அதிகமாகப் பெரிதுபடுத்திவிட்டதாகவும் அவர் சாடினார். நாட்டின் அதிகாரத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாகவும் அவர் மத்திய அரசை விமர்சித்தார்.
ஓபிசி பிரதிநிதித்துவம்
தொடர்ந்து பேசிய அவர், "தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 90% உள்ளனர். ஆனால் பட்ஜெட் தயாரித்த பிறகு அல்வா விநியோகம் செய்யப்படும்போது, இந்த 90% பேரைப் பிரதிநிதித்துவப்படுத்த யாருமே இல்லை. நாட்டின் உற்பத்தி சக்தியே இந்த 90% மக்கள்தான். ஆனால் அவர்களுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லை. ஹல்வாவை தயாரிப்பதே இந்த 90% மக்கள் தான். ஆனால், அதைச் சாப்பிட யாரும் இல்லை. இந்த மக்களுக்கும் நிச்சயம் பிரதிநிதித்துவம் தேவை.
மோசம்
தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசுக்குக் கிடைத்த தகவல்களின்படி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் பல லட்சம் மற்றும் பல கோடி சம்பளம் வாங்குவதில்லை என்பது தெரிய வந்தது. ஏனென்றால் அவர்கள் பெருநிறுவன நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகத்தில் இல்லை. அதேநேரம் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் டெலிவரி தொழில் செய்வோரின் பட்டியலைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
நான் செய்த தவறு
2004-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் நான் அரசியலில் நுழைந்தேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பாதுகாக்க நான் தவறிவிட்டேன் என்பதே உண்மை. அந்த தவறை ஒப்புக்கொள்கிறேன். ஓபிசி வரலாறு, பிரச்சினைகள் பற்றி எனக்கு இன்னும் கொஞ்சம் தெரிந்திருந்தால், அப்போதே நிச்சயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பேன் என்பதே என் வருத்தம். இது என்னுடைய தவறு தான். அதேநேரம் கட்சியின் தவறு இல்லை. அது என்னுடைய தனிப்பட்ட தவறு, நான் அதைச் சரி செய்யப் போகிறேன்" என்றார்.
முன்னதாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தொடர்பாகவும் மத்திய அரசை விமர்சித்திருந்தார். இது வெறும் அலட்சியம் மட்டும் இல்லை என்றும் விளிம்புநிலை சமூகத்தினரைக் கல்வி மற்றும் நிர்வாகத்தில் இருந்து விலக்கி வைக்கும் மோடி அரசின் திட்டமிட்ட நடவடிக்கையே இது என்றும் சாடினார்.












Click it and Unblock the Notifications