நல்லாதானே போயிட்டு இருந்துச்சு.. ‘இந்தியா’ கூட்டணிக்குள் புதிய குண்டை வீசிய சத்தீஸ்கர் முதலமைச்சர்
டெல்லி: இந்தியா கூட்டணியின் மூன்றவாது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் வரும் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் எதிர்கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் புதிய குண்டை போட்டு இருக்கிறார் பூபேஷ் பாகேல்.

சத்தீஸ்கர் முதலமைச்சரான இது இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ள நிலையில், இம்முறை மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குறைந்தகால செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்தியா என்ற கூட்டணியை பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் உருவாக்கியுள்ளன.
பாட்னாவில் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு பிரதமராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை என அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்ததே, இந்த கூட்டணி தொடர்ந்து வலுப்பெற காரணமாக அமைந்தது. ஆனால், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைத்ததில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் ராகுல் காந்தி பிரதமர் என்ற முழக்கத்தை எழுப்பத் தொடங்கி உள்ளார்கள்.
அந்த வகையில் விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சரே அதே கருத்தை சொல்லி உள்ளார். அவர் பேசுகையில், "ஒரு காங்கிரஸ்காரனாக ராகுல் காந்தி பிரதமர் முகமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்." என்று தெரிவித்து இருக்கிறார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை காரணமாக அவருக்கு கிடைத்த புகழை பார்த்து பாஜக பயந்துவிட்டது. அதன் காரணமாகவே அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியா கூட்டணியின் முக்கிய நோக்கம் சர்வாதிகாரம் செய்பவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். பிரியங்கா காந்தியும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும். அவரை நாடாளுமன்றத்தில் பார்க்க நான் விரும்புகிறேன். அவர்தான், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்." என்று தெரிவித்து உள்ளார்.
பாட்னா, பெங்களூரை தொடர்ந்து மும்பையில் நடைபெறும் மூன்றாம் கூட்டத்தில் கூட்டணியில் லட்சினை மற்றும் துணைக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும், பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்கள் இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications