"என் கட்டளையே சாசனம்"-அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட சோனியா ஆணை? இன்று அறிவிப்பு?
டெல்லி: லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தியும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்களா? இல்லையா? என்கிற சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வர இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் 5-வது கட்டமாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு மே 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை (மே 3) கடைசி தேதி.

ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படாமல் இருப்பது உ.பி. காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை வைத்து பாஜகவும் விமர்சித்து வருகிறது. நேரு குடும்பத்தின் பாரம்பரிய வாக்கு வங்கி உள்ள தொகுதியில் நேரு குடும்பத்தினரே போட்டியிட அச்சப்படுகிறார்களா? என்ற கேள்வியையும் முன்வைத்து வருகிறது பாஜக.
அமேதி- ரேபரேலி: அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களம் காண்கிறார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடித்தவர் ஸ்மிருதி இரானி. 2019-ம் ஆண்டு ரேபரேலியில் போட்டியிட்டு வென்றவர் சோனியா காந்தி. ஆனால் தற்போதைய தேர்தலில் ரேபரேலியில் சோனியா காந்தி போட்டியிடவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிவிட்டார் சோனியா. இதனால் ரேபரேலியில் பிரியங்கா காந்தி அல்லது பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா போட்டியிடலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. ரேபரேலியில் பாஜகவும் இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
பயம் எதுவும் இல்லையே..: இதனிடையே அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்த இரு தொகுதிகளின் வேட்பாளர்கள் அடுத்த 24 முதல் 30 மணிநேரத்தில் அறிவிக்கப்பட உள்ளனர். காங்கிரஸ் கட்சி யாரையும் கண்டும் பயப்படவும் இல்லை. களத்தை சந்திக்க தயாராகவே இருக்கிறது. அமேதி- ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிக்க இருக்கிறார் என்றார்.
ஆர்டர் போட்ட சோனியா?: இந்த நிலையில் ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் அமேதியில் மீண்டும் ராகுல் காந்தியும் போட்டியிடுவார்கள் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவை அழைத்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளின் போது பாரம்பரியமான குடும்பத்துக்கான வாக்கு வங்கி உள்ள தொகுதிகள் இவை. இந்த தொகுதியில் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் போட்டியிட்டாக வேண்டும். ஆகையால் நீங்கள் இருவருமே போட்டியிட வேண்டும் என கறாராக கட்டளையிட்டுள்ளார் என்கின்றன.
ராகுல்- பிரியங்கா போட்டியா?: ஆனால் சோனியா காந்தியின் இந்த கட்டளையை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருதரப்பு, ராகுல் காந்தியும் பிரியங்காவும் அமேதியிலும் ரேபரேலியிலும் போட்டியிடுவது உறுதி என்கிறது. இன்னொரு தரப்பு இருவருமே அமேதி- ரேபரேலியில் போட்டியிடப் போவது இல்லை என்கிறது. இந்த குழப்பங்களுக்கு இன்று விடை தெரிந்துவிடும்.
திடீர் வதந்தி: முன்னதாக நேற்று இரவு சமூக வலைதளங்களில் ரேபரேலியில் பிரியங்கா காந்தி, அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துவிட்டதாக சில தகவல்கள் காட்டுத் தீயாகப் பரவின. ஆனால் இது போலி செய்தி என பின்னர் தெரியவந்தது. ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். வயநாடு லோக்சபா தொகுதியில் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications