ரஞ்சன் கோகோய்யை நினைவிருக்கா.. மாநிலங்களவையில் ஒரேயொரு கேள்வி கூட கேட்காமல் விடைபெறுகிறார்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய், ராஜ்யசபாவில் தனது 6 ஆண்டுகள் பதவிக்காலத்தை அடுத்த மாதம் நிறைவு செய்கிறார். இந்தக் காலத்தில், அவர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, தனிநபர் மசோதாக்கள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை, ஒரு விவாதத்தில் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். அவரது சராசரி வருகை பதிவு 53 சதவீதமாக இருந்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனமான PRS, இந்த தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளது. தொகுத்த தரவுகளின்படி, பிப்.13ம் தேதி நிலவரப்படி, கோகோயின் அட்டனென்ஸ், 53% ஆக இருக்கிறது. இது ராஜ்யசபா எம்.பி.க்களின் சராசரி 80 சதவீத வருகையை விட மிகக் குறைவு.

விளக்கம் கொடுத்த கோகோய்
ராஜ்யசபா எம்.பி.யாக தனது செயல்பாடுகள் குறித்து தி பிரிண்ட் பத்திரிகைக்குப் பேசிய கோகோய், "என்னால் முடிந்த அளவுக்கு பல அமர்வுகளில் பங்கேற்றிருந்தாலும், எனது வருகை எனது எதிர்பார்ப்புகளுக்குக் குறைவாகவே இருந்தது என்று எனக்குத் தெரியும். எந்தக் கேள்வியும் கேட்கவில்லை, தனிநபர் மசோதா எதுவும் கொண்டுவரவில்லை, ஒரு முறை என்சிடி மசோதா குறித்துப் பேசினேன்.
குறைவாக பேசியத்து காரணம் இருக்கிறது. ஏனென்றால், ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவையில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டன. சமீபகாலமாகத்தான் ராஜ்யசபாவில் கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜிய நேரம் அர்த்தமுள்ள முறையில் நடைபெறுகிறது" என்று தனது குறைவான பங்கேற்புக்கு விளக்கமளித்தார்.
முதல் நியமன எம்பி
கோகோய் கடந்த 2019-ல் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதிவியில் இருந்து ஓய்வு பெற்றார், அப்போது அவர் சுமார் 13 மாதங்கள் நாட்டின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி இருந்தார். ஆனால், ஓய்வு பெற்ற 6 மாதங்களுக்குப் பிறகு, அவர் ராஜ்யசபாவுக்கு நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் முன்னாள் தலைமை நீதிபதி என்ற அடையாளத்திற்கு உள்ளானார்.
ராஜ்யசபா பதிவுகள்
முன்னதாக தலைமை நீதிபதியாக இருந்தபோது, அயோத்தியில் நடந்த ராமஜன்மபூமி-பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இவர் தலைமை தாங்கியிருந்தார். அவரது நியமன எம்.பி. பதவிக்காலமான 6 ஆண்டுகளில், அவர் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, அல்லது எந்த தனிநபர் மசோதாவையும் அறிமுகப்படுத்தவில்லை என்று PRS மற்றும் ராஜ்யசபா பதிவுகள் தெரிவிக்கின்றன.
நான் அரசியல்வாதி அல்ல
பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் எம்.பி.க்கள் முன்வைக்கும் 'சிறப்பு குறிப்புகளும்' அவர் வைக்கவில்லை. இது குறித்து கேட்டபோது, அவர் தி பிரிண்ட் பத்திரிகையிடம், "கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக நான் கேள்வி கேட்கவில்லை. பங்கேற்க வேண்டும் என்பதற்காக நான் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் நான் தொழில்ரீதியான அரசியல்வாதி அல்ல, எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை" என்றார்.
இருப்பினும், தாம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பலவிதமான பங்களிப்புகளைச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பின் பரிணாம வளர்ச்சி, அதன் விதிகள், நடைமுறை, நீதித்துறை மற்றும் சட்டமன்றத்தின் பங்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தூதரகத் தலைவர்கள், சட்ட அமலாக்க முகமைகளிடம் உரையாற்றியதை அவர் பட்டியலிட்டார்.












Click it and Unblock the Notifications