இடதுசாரி சாணக்கியர்-3 பிரதமர்கள் உருவாக்கத்தில் மெயின் ரோல்! அனைவருக்கும் 'தோழர்' சீதாராம் யெச்சூரி!
டெல்லி: இடதுசாரி சித்தாந்தத்தை போர்க்குணத்துடன் கையில் எடுத்த 'ஜனநாயக'வாதி சீதாராம் யெச்சூரி. வலதுசாரி பாஜகவினரும் கூட கை குலுக்கி இயல்பாக உரையாடக் கூடிய பண்பாளர்.. இந்திய அரசியல் வரலாற்றில் தேவகவுடா, குஜ்ரால் மற்றும் மன்மோகன்சிங் பிரதமர்களாக பதவி வகித்த காலத்தில் இடதுசாரிகளின் பங்களிப்புக்குப் பின்னணியில் இருந்து பெரும் பங்காற்றிய 'சாணக்கியர்'தான் தோழர் சீதாராம் யெச்சூரி.
சென்னை மாகாணத்தில் பிறந்த சீதாராம் யெச்சூரி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். 1960களின் இறுதியில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை இயக்கம் உச்சகட்டமாக வீறுகொண்டிருந்த காலத்தில் கல்லூரி படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலும் பின்னர் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் கால் பதித்தார் சீதாராம் யெச்சூரி.

இடதுசாரியாக சீதாராம் யெச்சூரி: முற்படுத்தப்பட்டோர் ஜாதியினரில் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் அடைக்கலமாகும் கட்சியாக இருந்தது சிபிஎம்- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி. அந்த வரிசையில் சீதாராம் யெச்சூரியும் இடதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு எஸ்.எஃப்.ஐ.எனப்படும் இந்திய மாணவர் சங்கத்தில் இருந்து இடதுசாரி அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1974-ல் எஸ்எப்ஐ-ல் இணைந்து 1975, 1976-களி சிபிஎம் கட்சியின் ' இளம் தோழராக' இந்திராவின் எமர்ஜென்சிக்கு எதிராக களமாடிய இடதுசாரிகளில் ஒருவர் சீதாராம் யெச்சூரி. இதனால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.. சிறைவாசம் அனுபவித்தார். 1977-ம் ஆண்டு இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக வேந்தர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவரது வீடு நோக்கி நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் சீதாராம் யெச்சூரி தலைமையில்தான் நடந்தது.
சிபிஎம் மத்திய குழுவில்.. : அவசரநிலை பிரகடனம் முடிவடைந்த பின்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவராக உருவெடுத்தார் சீதாராம் யெச்சூரி. பின்னர் 1984-ம் ஆண்டு சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வானார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். இதனால் முதுபெரும் இடதுசாரித் தலைவர்களான நம்பூதிரிபாட், பசவபுன்னையா, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் உள்ளிட்டோருடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார் யெச்சூரி. அதே காலகட்டத்தில் யெச்சூரிக்கு இணையான இடதுசாரி இயக்கத்தில் வளர்ந்தவர் பிரகாஷ் காரத்.
கூட்டணி அரசுகளில் சாணக்கியர், படை தளபதி: 1990களின் மத்தியில் இந்தியாவில் கூட்டணி அரசுகள் உருவாவதும் கவிழ்வதுமாக இருந்தன. அப்போது சிஎபிம் பொதுச்செயலாளராக ஹரிகிஷன்சிங் சுர்ஜித் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் கூட்டணி அரசுகளை அமைப்பதில் இடதுசாரிகள் மிக முக்கியப் பங்கு வகித்தனர். ஜனதா தளத்தின் தேவகவுடா பிரதமரான போதும் சரி, பின்னர் குஜ்ரால் பிரதமரான போதும் இடதுசாரிகள் பங்களிப்பு பிரதானமாக இருந்தது. அப்போது ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தின் 'படைத் தளபதியாக' செயல்பட்டவர் சீதாராம் யெச்சூரி. அந்த கால கட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரத்துடன் இணைந்து கூட்டணி அரசுகளுக்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தவர் சீதாராம் யெச்சூரி.

ஜோதிபாசு விவகாரம்: அதே காலகட்டத்தில் மேற்கு வங்க முதல்வராக இருந்த மற்றொரு இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு, பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அன்றைய இளம் இடதுசாரிகளான சீதாராம் யெச்சூரியும் பிரகாஷ் காரத்தும் இதை கடுமையாக எதிர்த்தனர். இதனால் இந்தியாவின் பிரதமர் பதவி ஒரு இடதுசாரி தலைவருக்கு கிடைக்கும் வாய்ப்பு எளிதாக விட்டுக் கொடுக்கப்பட்டது. இதனைத்தான் பின்னாளில் மிகப் பெரிய வரலாற்றுப் பிழை என ஜோதிபாசு குறிப்பிட்டிருந்தார். அப்போது எல்லாம் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் சீதாராம் யெச்சூரிதான் அதிகம் பங்கேற்றார்.
காங்கிரஸ் ஆதரவு விவகாரம்: 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். ஆனால் அப்போது, பாஜகவைத் தடுக்க காங்கிரஸ் அரசை ஆதரித்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கட்சியின் உள்நிலைகளில் அதிகம் வலியுறுத்தியவர் சீதாராம் யெச்சூரி.
பிரகாஷ் காரத் vs சீதாராம் யெச்சூரி: இதன் பின்னரே இடதுசாரிகளிடையே யெச்சூரி vs காரத் (சீதாராம் யெச்சூரி- பிரகாஷ் காரத்) என 'மறைமுக' பிளவும் உருவானது. அப்போது சீதாராம் யெச்சூரியை மேற்கு வங்க இடதுசாரிகள் ஆதரித்தனர்; பிரகாஷ் காரத்தை கேரளா இடதுசாரிகள் ஆதரித்தனர். 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சிபிஎம் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து இயல்பாகவே சீதாராம் யெச்சூரிதான் சிபிஎம் பொதுச்செயலாளர் என்கிற லாபியை லாவகமாகவும் உருவாக்கி வைத்திருந்தார். 2015-ம் ஆண்டு தாம் நினைத்தபடியே சிபிஎம் பொதுச்செயலாளரானார் சீதாராம் யெச்சூரி. அவருக்கு எதிராக கேரளா இடதுசாரிகள் ராமச்சந்திர பிள்ளையை முன்னிறுத்திய போதும் வென்றது சீதாராம் யெச்சூரிதான்.
பின்னடைவுகளை சந்தித்த யெச்சூரி: சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக இருந்த காலத்தில்தான் 25 ஆண்டுகால கோட்டையில் இருந்து இடதுசாரி அரசாங்கம் வெளியேற்றப்பட்டது. சிபிஎம் கட்சியிலும் பிரகாஷ் காரத் கோஷ்டியால் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டவர் சீதாராம் யெச்சூரி. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற யெச்சூரியின் வரைவு தீர்மானத்தை பிரகாஷ் காரத் கோஷ்டி தோற்கடித்த போது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் அப்பதவியில் நீடித்தார் யெச்சூரி.
காங்கிரஸுடன் அதீத நெருக்கம்: சீதாராம் யெச்சூரி காலத்தில் லோக்சபா தேர்தல்களில் சிபிஎம் குறிப்பிட்டத்தக்க முன்னேற்றம் பெறவில்லைதான். அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருந்தார் சீதாராம் யெச்சூரி. இதனால்தான் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் போன்ற தலைவர்கள், சீதாராம் யெச்சூரி சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் மட்டுமல்ல.. காங்கிரஸுக்கும் பொதுச்செயலாளராகிவிடுகிறார் சில நேரங்களில்.. அந்த அளவுக்கு காங்கிரஸின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர் யெச்சூரி என கூறியிருந்தார். இத்தகைய போர்க்குணமிக்க தலைவர் சீதாராம் யெச்சூரியின் மரணம் இந்திய அரசியலுக்கு குறிப்பாக வலதுசாரிகளை தீவிரமாக எதிர்க்கும் ஜனநாயக அரசியலுக்கு மாபெரும் பேரிழப்புதான்! இந்திய அரசியலின் இடதுசாரி முகமான தோழர் சீதாராம் யெச்சூரிக்கு சிவப்பு வணக்கம்!












Click it and Unblock the Notifications