காங்கிரஸே பயந்த சட்டம்.. அதிரடி காட்டும் பிரதமர் மோடி! மத்திய அரசு ஊழியர்களின் பென்சனுக்கு கடிவாளம்
டெல்லி: ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்பட அரசு அதிகாரிகளின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ மத்திய அரசால் முடியும். இதற்காக இந்திய சேவைகள் (இறப்பு- ஓய்வு பலன்கள்) விதிகள் 1958 இல், மத்திய அரசு அண்மையில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் கடுமையான குற்றம் செய்தாலோ அல்லது கடுமையான முறைகேடு வழக்கில் தண்டனை கிடைத்தாலோ, அவர்களின் ஓய்வூதியத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடியும் அல்லது ரத்து செய்ய முடியும். இதற்கு மாநில அரசு உள்பட யாருடைய அனுமதியும் மத்திய அரசுக்கு தேவையில்லை.

ஆனால் முன்பு இருந்த சட்டம் எப்படி இருந்தது என்றால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் (ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பணிக்குழு) ஒப்புதல் கண்டிப்பாக தேவை.
அதாவது மாநில அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஓய்வூதியத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவு செய்ய முடியும். இதுதான் முந்தைய விதியாக இருந்தது. இப்போது புதிய சட்ட திருத்தம் காரணமாக மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்பதால் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏனெனில் புதிய சட்டத்திருத்தத்தின் படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் ஏதாவது கடுமையான குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் ஓய்வுதியம் ரத்து செய்யப்படும்.
அதேபோல் ஓய்வு பெற்ற அதிகாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால், அதாவது கடுமையான முறைகேடுகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு நம்பினால், அவருக்கு நோட்டீஸ் கொடுத்து அவரது ஓய்வூதியத்தை நிறுத்த மத்திய அரசுக்கு உரிமை உண்டு. நோட்டீசுக்கு சம்பந்தப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரியின் பதிலுக்கு பிறகு மத்திய அரசின் முடிவே இறுதியாகும்.
இந்த சட்டத்துக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசை விமர்சித்து எதுவும் பேசாமல், அரசு அதிகாரிகள் அமைதியாக பணிபுரிய வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஓய்வுபெற்ற அதிகாரிகள் மத்திய அரசை விமர்சித்து ஒரு கட்டுரையை எழுதினாலோ, மத்திய அரசுக்கு எதிராக ஊடகத்திற்கு நேர்காணல் கொடுத்தாலோ, போராட்டம் நடத்தினாலோ அல்லது அரசுக்கு எதிரான அணிவகுப்பு அல்லது கருத்தரங்கில் பங்கேற்று அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தாலோ மத்திய அரசால் புதிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.இந்த சட்டத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு ஏராளமான ஓய்வு பெற்ற அதிகாரிகள் அண்மையில் கடிதமும் எழுதி இருந்தனர்.
அதேநேரம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தயார் செய்யவில்லை.கடந்த 2009ல் காங்கிரஸ் அரசுதான் தயார் செய்து வைத்திருந்தது. ஆனால் அப்போது அரசு அதிகாரிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றவில்லை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு துணிந்து இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
முன்னதாக கடந்த 2021 இல், இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்), சுங்கம் மற்றும் மத்திய கலால் சேவை உள்ளிட்ட மத்திய சிவில் சேவைகள் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்திலும் புதிய திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்படி உளவுத்துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான துறைகளில் பணியாற்றிய அதிகாரிகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில், தங்களது துறை தொடர்பான விஷயங்களையோ, முக்கியமான தகவல்களையோ வெளியிடும் முன், அந்தத் துறையின் தலைமையிடம் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications