குஜராத் பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு: 11 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
டெல்லி: குஜராத்தில் 2002-ம் ஆண்டு பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் இந்து சாமியார்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் இந்து-முஸ்லிம் மத வன்முறை வெடித்தது. அப்போது குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார்.

2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த கொடூர சம்பவங்களில் ஒன்றுதான் பில்கிஸ் பானு என்கிற கர்ப்பிணி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது. பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம், குடும்பத்தினர் படுகொலை வழக்கில் 2008-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொடூர குற்றச்செயல் புரிந்த 11 பேருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த நிலையில் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குற்றவாளிகள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதனை கருத்திக் கொள்ள வேண்டும் என குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து 11 பேர் விடுதலை தொடர்பாக குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். கோத்ரா சிறையில் இருந்து ஆகஸ்ட் 15-ந் தேதி 11 குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றவாளிகளுக்கு அளிக்க வரவேற்பும் தெரிவிக்கப்பட்ட ஆதரவு கருத்துகளும் கடும் சர்ச்சையாகின. இந்த 11 பேர் விடுதலைக்கு பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் சுபாஷ்னி அலி, ரேவதி லவுல், ரூப் ரேகா வர்மா ஆகியோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா சார்பாகவும் ஒரு பொதுநலன் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்பாக மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அபர்ணா பட், இம்மனுவை நாளையே விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதைத்தான் நாங்கள் எதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளோம் என்றார். இதனை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications