வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ183.67 கோடி ஒதுக்கீடு- 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி
டெல்லி: வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு இந்த மாதம் ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.1836.67 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 6 மாநிலங்களுக்கு ரூ3,063.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இயற்கை பேரிடர், புயல் வெள்ள பாதிப்புகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டது. 'டௌக்டே' சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1,133.35 கோடி, 'யாஸ்' சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.586.59 கோடி ஒதுக்கப்பட்டது.

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம்/நிலச்சரிவுகளுக்காக அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ 187.18 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த கூடுதல் உதவியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு கூடுதலாகும். 2021-22ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 'டௌக்டே' மற்றும் 'யாஸ்' புயல்களுக்குப் பிறகு, 20.05.2021 அன்று தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குஜராத்திற்கு முன்பணமாக ரூ 1,000 கோடி விடுவிக்கப்பட்டது, 29.05.2021 அன்று மேற்கு வங்காளத்திற்கு ரூ 300 கோடி வழங்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கையைப் பெறுவதற்குக் காத்திருக்காமல், 22 அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுக்களை மத்திய அரசு உடனடியாக நியமித்தது என மத்திய அரசு கூறியிருந்தது.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஆனால் தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாதது சர்ச்சையானது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரி செய்வதற்காக 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக் கோரி தமிழக அரசு நவம்பர் 16, நவம்பர் 25, டிசம்பர் 15-ஆகிய தேதிகளில் விரிவான அறிக்கையுடன் கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும் மத்திய அரசு எந்த பதிலும் தராததால் மீண்டும் கடிதம் அனுப்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு
இந்நிலையில் வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்திற்கு இந்த மாதம் ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த தொகையையும் சேர்த்து தமிழகத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை, ரூ.1836.67 கோடியை விடுவித்துள்ளது. வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.9,871 கோடியை இன்று விடுவித்துள்ளது.

இதுவரை ரூ.98,710 கோடி
இது மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மானியத்தின் 10-வது தவணையாகும். தகுதி வாய்ந்த மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.98,710 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 275-வது பிரிவின்படியும், வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் 15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மாதம் தோறும் இந்தத் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications