கொரோனா தடுப்பு.. ரூ.23,123 கோடி அவசரகால நிதி ஒதுக்கீடு.. சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் அறிவிப்பு!
டெல்லி; 23,123 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அவசரகால ஒதுக்கீடாக செய்யப்படும் என்று புதிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர்.
இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் மன்சுக் மண்டாவியாவிற்கு அந்த பொறுப்பு அளிக்கப்பட்டது.

பொறுப்பு
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா பரவல், விவசாயிகள் போராட்டம், பொருளாதார சரிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில், கொரோனா நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு புதிய அவசரகால பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேட்டி
இதுகுறித்து பேட்டி அளித்த புதிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, 23,123 கோடி ரூபாய் கொரோனா நிவாரண பணிகளுக்காக அவசரகால ஒதுக்கீடாக செய்யப்படும். இதில் மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் பங்களிப்பை கொடுக்கும். 8000 கோடி ரூபாய் மாநில அரசுகளிடம் இருந்து மொத்தமாக இதற்காக பெறப்படும்.

நிதி எவ்வளவு
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்துதான் கொரோனா பரவலை தடுக்க முடியும், அடுத்த 9 மாதங்களில் கொரோனா பரவலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். கட்டமைப்பை வலுவாக்க வேண்டும். மிக வேகமாக, துரிதமாக நாம் செயல்பட வேண்டும்.

மாநில அரசுகள்
மாநில அரசுகளுக்கு உதவ வேண்டியது எங்களின் கடமை. அதுவே எங்களின் முதல் பணி. இந்தியாவில் 50 ஆயிரமாக இருந்த ஆக்சிஜன் படுக்கைகள் 4.73 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களின் ஆக்சிஜன் தேவை சரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நிவாரண தொகை மூலம் நாடு முழுக்க குழந்தைகளுக்கான வார்டுகள் 736 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும்.

ஐசியூ
புதிய நடமாடும் ஐசியூ மருத்துவமனைகள், குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகள், கூடுதலாக 20 ஆயிரம் ஐடியூ படுக்கைகள் அதில் குழந்தைகளுக்கான 20% ஐசியூ படுக்கைகள் உருவாக்கப்படும். கொரோனா தடுப்பு மருந்துகளை மாவட்டங்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையிலும் இந்த நிதி செலவிடப்படும்.

9 மாதம்
அடுத்த 9 மாதங்களில் 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி, சேமிப்பு மையங்கள் மாநிலங்களில் அமைக்கப்படும். 1 கோடி மருந்துகள் மாவட்ட அளவில் அனுப்பி வைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்படும். அடுத்த 9 மாத தடுப்பு பணிகளுக்காக இந்த நிதி செலவு செய்யப்படும், என்று புதிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications