'படையெடுத்து வந்தவர்களுடன் தான்.. இங்கு இஸ்லாம் வந்தது.. அது தான் வரலாறு..' மோகன் பகவத் பரபர பேச்சு
டெல்லி: இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே வம்சாவளியில் இருந்து வந்தவர்கள் எனக் கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவைப் படையெடுத்து வந்தவர்களுடன் தான் இங்கு இஸ்லாம் வந்தது என்றும் இதைத்தான் அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் புனே நகரில் சர்வதேச கொள்கை அறக்கட்டளை சார்பில் "Nation First, Nation Supreme" என்றை தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.. அதில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.
அதில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே வம்சாவளியில் இருந்து வந்தவர்கள் தான் எனக் குறிப்பிட்டார்.

ஒரே வம்சாவளி
இந்த கருத்தரங்கில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான். எங்களைப் பொறுத்தவரை, இந்து என்ற சொல் நமது தாய்நாடு, மூதாதையர்கள் மற்றும் கலாசாரம் அளிக்கும் வளமான பாரம்பரியத்தையே குறிக்கிறது. இதனால் எங்களைப் பொறுத்தவரை இங்குள்ள அனைத்து இந்தியர்களும் இந்துக்கள் தான்.

விஷமத்தனமான பிரசாரம்
இந்திய நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, நாட்டை பிளவு படுத்த விரும்புபவர்கள் தான் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே மக்கள் இல்லை என்றும் தனித்தனியானவர்கள் என்றும் விஷமத்தனமான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்களுக்கு நாம் ஒருபோதும் இரையாகிவிடக் கூடாது. நாம் அனைவரும் எப்போதும் ஒரே தேசம் தான். நாம் தொடர்ந்து ஒரே தேசமாக ஒற்றுமையாக இருப்போம். ஆர்எஸ்எஸ் கொள்கை இது தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இந்தியாவைப் படையெடுத்து வந்தவர்கள்
இந்தியாவைப் படையெடுத்து வந்தவர்களுடன் தான் இங்கு இஸ்லாம் வந்தது. இது தான் வரலாறு. எனவே, இது தான் அனைவருக்கும் சொல்லப்பட வேண்டும். உண்மையான முஸ்லீம் தலைவர்கள் இதுபோன்ற அடிப்படைவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும். இந்துக்களுக்கு யாருடனும் பகைமை இல்லை. ஏனென்றால், முஸ்லீம்கள் இந்தியாவில் அச்சத்துடன் வாழ எந்தவொரு காரணமும் இல்லை. இதை நாம் எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ, அந்தளவு அது நம் சமூகத்திற்கும் நல்லது.

இந்தியா உலக வல்லரசாகும்
இந்தியர்கள் எப்போதும் அனைத்து மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகின்றனர். எனவே, இந்தியா விரைவில் உலக வல்லரசாக மாறும். நம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நாம் மது கலாசாரத்தில் அனைத்து வகையான மாறுபட்ட கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து கருத்துகளையும் நம்பிக்கைகளுக்கும் நாங்கள் மதிப்பு அளிப்போம்.

அவமதிக்கப்படாது
நமது கலாச்சாரத்திற்கு ஏற்ப, மற்ற மதங்கள் எந்த விதத்திலும் அவமதிக்கப்படாது என்பதில் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் சர்வதேச அளவில் இந்தியா செலுத்த வேண்டிய ஆதிக்கம் குறித்துச் சிந்திக்க வேண்டுமே தவிர, இஸ்லாம் போன்ற ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையைப் பற்றி இல்லை. வளமான ஒரு இந்தியாவைக் கட்டமைக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, ஒன்றாக பணியாற்ற வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது" என்று பேசினார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்
இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தவிர, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், "ஒரு வளமான சமுதாயத்திற்குப் பன்முகத்தன்மை முக்கியம். இந்திய கலாசாரம் அனைவரையும் சமமாகவே கருதுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications