இது மக்கள் பிரச்னை.. இதை பத்தி கண்டிப்பா பேசியே ஆகனும்.. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எரிபொருள் விலையேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என கூறி காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் நிதி மசோதா மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பல புதிய வரி திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

எரிபொருள் விலையேற்றம்
மாநிலங்களை மீண்டும் தொடங்கியபோது பேசிய காங்கிரசின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், "பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு லிட்டருக்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையும் 80 ரூபாயை கடந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலைகளும் உயர்ந்துள்ளன. விவசாயிகள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு மட்டும் கலால் வரியாக ரூ.21 லட்சம் கோடியை வசூல் செய்துள்ளது" என்றார்.

காங்கிரஸ் அமளி
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை பல்வேறு தலைவர்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். கடைசியாகக் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. எரிபொருள் விலையேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி அமளியில் ஈடுபட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்
அதேபோல தலைநகரில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டமும் 100ஆவது நாளை கடந்துள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தப் பிரச்சினையும் முக்கியமானதாக எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து மாநில தேர்தல்
இதுதவிர பல அரசியல் தலைவர்களும் தற்போது பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் பல முக்கிய தலைவர்கள் இல்லாமலேயே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. தேர்தல்கள் நடைபெறுவதால் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பிகள் சுதீப் பாண்டியோபாத்யாய் மற்றும் டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்ற அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications