நீட் மோசடிகள்- ராகுல் மைக் துண்டிப்பு- லோக்சபாவை நாள் முழுவதும் முடக்கிய இந்தியா கூட்டணி எம்பிக்கள்!
டெல்லி: நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று முடக்கினர். நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும் லோக்சபா, ராஜ்யசபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். லோக்சபாவில் நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதும் சர்ச்சையானது. லோக்சபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
லோக்சபா இன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் எம்பிக்கள் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராகுல் காந்தி வலியுறுத்தல்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுந்து, அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த நாட்டின் மாணவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும். இதனை முக்கியமான பிரச்சனையாக நாங்கள் கருதுகிறோம். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வு மோசடிகள் குறித்து இன்று சபையில் தனியே விவாதம் நடத்த வேண்டும் என்றார்.
ராகுல் காந்தி மைக் துண்டிப்பு: ஆனால் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ராகுல் காந்தியின் மைக் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து லோக்சபா நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
நாள் முழுவதும் லோக்சபா ஒத்திவைப்பு: பின்னர் பகல் 12 மணிக்கு சபை கூடிய போதும் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். ராகுல் காந்தி பேசும் போது மைக் துண்டிக்கப்பட்டதையும் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து லோக்சபா சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் கடும் அமளி: இதேபோல ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார். ராஜ்யசபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் ஒருங்கிணைந்து, நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தியதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நீட் தேர்வு மோசடிகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது என முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்யசபாவில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் முழக்கங்களை எழுப்பியதால் சபையில் அமளி நிலவியது. இதனையடுத்து ராஜ்யசபாவும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். பகல் 12 மணிக்கு ராஜ்யசபா மீண்டும் கூடிய போது, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. பாஜக எம்பி சுதன்சு திரிவேதி பேசிக் கொண்டிருந்த போதும் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் சபையில் அமளி நீடித்தது. தேவகவுடாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர் இந்தியா கூட்டணி எம்பிக்கள்.












Click it and Unblock the Notifications