சவுக்கு சங்கர் பேட்டி.. தமிழக போலீசுக்கு எதிராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி ஐகோர்டில் அதிரடி வழக்கு
டெல்லி : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட போது, அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பபட்டார். டெல்லியில் கடந்த மே மாதம் 10ம் தேதி கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு தற்போது ஜாமீனில் இருக்கிறார். இவர் டெல்லி ஐகோர்ட்டில் தமிழக போலீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அதை பற்றி பார்ப்போம்.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்த சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கடந்த மாதம் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே அதே சம்பவத்திற்காக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழும் அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவரை திருச்சி தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து செய்து தமிழகம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 80 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெலிக்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். அப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
தற்போது ஜாமீனில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், " என்னுடைய வழக்கு தொடர்பாக பிரஸ் கவுன்சில் தலைவரை மே மாதம் 11-ந்தேதி சந்திக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் தமிழ்நாடு போலீஸ் என்று கூறிக்கொண்டு சிலர் மே மாதம் 10-ந்தேதி என்னை கைது செய்தனர். ஆனால் தமிழக போலீசார் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல், 66 மணி நேரம் சட்டவிரோதமாக வைத்திருந்து, என்னை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
என்னை கைது செய்தது குறித்து தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கைதின் போது பின்பற்ற வேண்டிய நோட்டீஸ், கைதுக்கான காரணத்தை தெரிவிப்பது, முதல் தகவல் அறிக்கையை அளிப்பது போன்ற விதிமுறைகளை தமிழ்நாடு காவல் துறை மீறியுள்ளது. துன்பப்படுத்தியதற்காகவும், மதிப்பை கெடுத்ததற்கும், அவமானப்படுத்தியதற்கும் இழப்பீடாக ரூ.1 கோடி அளிக்க தமிழ்நாடு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று பெலிக் ஜெரால்டு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் ஓரி விசாரித்து, மனுதாரரருக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து விசாரணையை டிசம்பர் மாதம் 16-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications