வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு பெற்று பணி நியமனமானவர்கள் நிலை என்ன? வழக்கறிஞர் வில்சன் விளக்கம்
வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அதை பயன்படுத்தி கல்வி, வேலைக்கு சென்றவர்களின் நிலையும் தீர்ப்புக்கு உட்பட்டதுதான் என்று வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.
டெல்லி: வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அதை பயன்படுத்தி கல்வி, வேலைக்கு சென்றவர்களின் நிலையும் தீர்ப்புக்கு உட்பட்டதுதான் என்று வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், அதுகுறித்து விளக்கியுள்ளார் வில்சன்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது.

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து
இதையடுத்து வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23ம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்று காலை நீதிபதிகள் எல்.நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

நியாயமான காரணங்கள்
அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பில், 'உள் ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும்.உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும். சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை.

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்தின் 14,16வது பிரிவுகளுக்கு விரோதமானது. வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும். வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசு, பாமக உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம், என்று தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர் வில்சன்
இந்த தீர்ப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த வழக்கறிஞர் வில்சன், தீர்ப்பின் முக்கிய சாராம்சத்தில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. தன்னிச்சையாக செயல்பட முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவித்தார். உள் ஒதுக்கீடு சட்டத்தில் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் வாங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்கு உட்பட்டவர்களே
குடியரசுத்தலைவரின் ஒப்புதல் வாங்கத் தேவையில்லை எனவும் உள் ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டியது அவசியம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும் வில்சன் கூறியுள்ளார். இந்த தீர்ப்பின் படி இதுவரை 10.5% இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி, கல்வி வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்றவர்களும் இந்த தீர்ப்புக்கு உட்பட்டவர்களே என்றும் வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications