முன் ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்ய வாய்ப்பு
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ 305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றது. இதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ 2017-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என கோரி முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி , சிதம்பரத்தின் முன்ஜாமீன் கொடுக்க கடந்த 20-ஆம் தேதி மறுப்பு தெரிவித்தார்.
இதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கமுடியாது என தெரிவித்தனர்.
மேலும் நீதிபதி கூறுகையில் முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை கிடையாது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் வழக்கு சரியான பாதையில் செல்கிறது. விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத் துறை வழக்கில் உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications