திரிபுரா உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க மறுப்பு- அமைதியை நிலைநாட்ட மாநில அரசு உச்சநீதிமன்றம் அறிவுரை
டெல்லி: திரிபுராவில் வன்முறைகள் தொடருவதால் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் திரிபுராவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. நாளை மறுநாள் வாக்குப் பதிவும் வரும் 28-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
திரிபுராவைப் பொறுத்தவரையில் ஆளும் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை பாஜகவும் போலீசாரும் இணைந்து தாக்குவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

சாயோனி கோஷ் கைது விவகாரம்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டார். முதல்வர் பிப்லப் தேவ் பொதுக்கூட்டத்தை கிண்டலடித்ததாலும் பாஜக தொண்டர்களை கார் ஏற்ற கொல்ல முயற்சித்த புகாரிலும் சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.

திரிணாமுல் தொண்டர்கள் மீது தாக்குதல்
பாஜகவினர் போலீஸ் போல் ஹெல்மெட் அணிந்து கொண்டு லத்திகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை தாக்கினர். போலீசார் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோக்களை திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி வெளியிட்டிருந்தார். மேலும் உடனடியாக திரிபுரா செல்வதற்கு அபிஷேக் பானர்ஜி முயற்சித்தார். ஆனால் அவரை அகர்தாலாவில் தரை இறங்க முதலில் திரிபுரா அரசு மறுத்தது. பின்னர் நேற்று அபிஷேக் பானர்ஜி அகர்தலாவில் முகாமிட்டிருந்தார்.

அமித்ஷாவுடன் சந்திப்பு
அத்துடன் திரிபுராவில் தொடர்ந்து வன்முறைகள் நிகழ்வால் உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. மேலும் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்து திரிபுரா வன்முறைகள் குறித்து முறையிட்டது. இது தொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை கேட்பதாக அமித்ஷா உறுதி அளித்திருந்தார்.

உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, திரிபுரா உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. அதே நேரத்தில் திரிபுரா மாநில அரசு சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications