உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: மத்திய அரசுக்கு கடும் பின்னடைவு தந்த தேர்தல் பத்திரம் என்பது என்ன?
டெல்லி: மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரங்கள் திட்டத்தால் நாட்டில் கறுப்பு பணம் ஒழியாது; மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது; தேர்தல் பத்திரம் என்பதே அரசியல் சாசனத்துக்கு எதிரானது; தேர்தல் பத்திரங்களுக்காக கம்பெனி சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் மிக கடுமையாக சாடியுள்ளது.
நாட்டில் தேர்தல் பத்திரம் என்பது பெரும் விவாதப் பொருளாகவும் பேசு பொருளாகவும் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மத்தியில் ஆளும் பாஜக அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

தேர்தல் பத்திரம் என்பது என்ன?: 2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும்.
யார் யார் வாங்க முடியும்?: தேர்தல் பத்திர திட்டத்தின் விதிமுறைகளின்படி, இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் (அரசிதழ் அறிவிப்பின் பிரிவு எண். 2 (டி ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29ஏ -இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற. ,அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையவையாகும் தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும்.
29 கிளைகளில்தான் பெற முடியும்: பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய கிளைகளில் முதலில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகளுக்கு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு மட்டும் செல்லும்: தேர்தல் பத்திரம் விநியோகம் செய்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லத் தக்கது. பத்திரம் வாங்கும் எந்த அரசியல் கட்சியும் கெடு தேதி முடிந்த பிறகு வங்கியில் அதை டெபாசிட் செய்து, நிதியைப் பெற இயலாது. தகுதியான எந்த அரசியல் கட்சியும் பத்திரத்தை வங்கியில் டெபாசிட் செய்தவுடன் அதே வங்கியில் அக்கட்சி வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் அதே நாளில் சேர்க்கப்பட்டுவிடும்.
அருண் ஜேட்லி கருத்து: மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி 2017-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் குறித்து விரிவான கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியிருந்தார். அதில், தேர்தல்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அடிப்படையான கூறுகள். தேர்தல்களில் ஏராளமான பணம் செலவாகிறது. ஆண்டு முழுவதும் அரசியல் கட்சிகளின் செயல்பாடு, பெருமளவிலான செலவுடன் தொடர்பு கொண்டுள்ளன. அரசியல் கட்சிகளின் நன்கொடை விவகாரத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை என்பது இல்லை. வழக்கமாக அரசியல் கட்சிகளுக்கான நிதியானது நன்கொடை மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் நன்கொடை கொடுப்பவர்கள் பற்றிய விவரம் யாருக்கும் தெரியாது அல்லது கற்பனையானதாக இருக்கும். எவ்வளவு நன்கொடை அளிக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படாது. இதனால்தான் அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை முறையை மாற்றும் நடவடிக்கை அவசியமாகிறது. நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திர திட்டமானது, நன்கொடையாளர், அங்கீகரிக்கப்பட்ட வங்கிக்கிளையில் மட்டுமே தேர்தல் நன்கொடை பத்திரத்தை வாங்க முடியும். இதன் மூலம் நன்கொடையாளர் வாங்கும் பத்திரத் தொகையை தன்னுடைய கணக்கில் வெளிப்படுத்த முடியும். இந்த பத்திரங்களின் வாழ்நாள் 15 நாட்கள் மட்டுமே. இந்த பத்திரங்களை அரசியல் கட்சிகள் முன்கூட்டியே முறைப்படி அறிவித்துள்ள கணக்கில் மட்டுமே வரவு வைக்க முடியும். ஒவ்வொரு அரசியல் கட்சியும், தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் பெற்ற தொகைப்பற்றி, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். இந்த ஒட்டுமொத்த நன்கொடை நடவடிக்கை, வங்கி மூலமாகவே நடைபெறுகிறது. அனைத்து நன்கொடையாளர்களும், தாங்கள் வாங்கிய நன்கொடை பத்திரங்களின் தொகைப்பற்றி கணக்கில் குறிப்பிட வேண்டும் மற்றும் எல்லா அரசியல் கட்சிகளும் எவ்வளவு தொகைக்கு பத்திரங்களை பெற்றார்கள் என்ற விவரத்தை வெளிப்படுத்த வேண்டிய முறை தேவையானதாக இருந்தது என விவரித்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு: இந்த தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கிறது என மத்திய அரசு தரப்பு வாதிட்டாலும் பொதுமக்களுக்கு இது குறித்து கேள்வி கேட்க அதிகாரம் இல்லை என்கிறது. இதனால் தேர்தல் பத்திரத்தை பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளிக்க உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது; தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களது உரிமையை பறிக்கிறது;
தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது; தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதிரானது; தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கறுப்பு பணத்தை ஒழிக்க உதவாது என காட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.












Click it and Unblock the Notifications