மோடி பாராட்டிய ஆர்ட்டிகிள் 370! திரைப்படம்.. வளைகுடா நாடுகளில் திரையிட தடை.. பின்னணி என்ன
டெல்லி: சமீபத்தில் ஆர்ட்டிகிள் 370 எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், இது அனைத்து வளைகுடா நாடுகளிலும் திரையிட தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரைப்படங்கள் மூலம் அரசியல் பேசுவது காலங்காலமாக இருந்து வந்தாலும், திரைப்படங்களை அரசியல் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துவது என்பது சமீப காலமாக அதிகரித்து வந்திருக்கிறது. அந்த வகையில், தி காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற படங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன.

90களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் குறித்து, காஷ்மீர் பைல்ஸ் படம் பேசுவதாக சொல்லப்பட்டாலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை இப்படம் விதைப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் 100% வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல, சில மாநிலங்களில் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு நாள் விடுப்பும் அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டது. இதே வரிசையில் பாஜகவினரால் கொண்டாடப்பட்ட மற்றொரு படம்தான் கேரளா ஸ்டோரி.
இது வலதுசாரிகளின் வெளிப்படையான பிரச்சார படம் என்று ஏறத்தாழ அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் இப்படியான படங்களின் தொடர்ச்சியாக, தற்போது ஆர்டிகிள் 370 எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த வாரம் ஆர்ட்டிகிள் 370 பற்றிய படம் வெளியாகும் என்று கேள்விப்பட்டேன். இது நல்ல விஷயம். மக்கள் சரியான தகவல்களைப் பெற இது உதவும்" என்று கூறியிருந்தார். மறுபுறம் சினிமா விமர்சகர்கள், இதனை பிரசார படம் என்றே விமர்சித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் இந்த திரைப்படம் அனைத்து வளைகுடா நாடுகளிலும் திரையிட தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பெரும் எதிர்ப்புகள் மேலெழுந்தன. போராட்டங்கள் பல இடங்களிலும் நடந்தன. தற்போது வரை ஜம்மு காஷ்மீரின் நகர் பகுதியிலிருந்து ராணுவம் முற்றிலுமாக விலகிக்கொள்ளவில்லை. காரணம், அங்கு பதற்றம் இன்றும் குறைவில்லை என்பதால்தான்.
இப்படி இருக்கையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்படும் விளக்கங்களை நியாயப்படுத்தும் வகையில், ஆர்ட்டிகிள் 370 திரைப்படம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதனை தொடர்ந்தே தற்போது இந்த படத்திற்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications