செபி தலைவரின் விளக்கம் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது: மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க்
டெல்லி: அதானி நிதி முறைகேடு நிறுவனங்களில் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுக்கு 'செபி' தலைவர் மாதபி புரி புச் அறிக்கை வெளியிட்டு இருந்தார். செபி தலைவரின் அறிக்கை பல முக்கியமான கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது என ஹிண்டன்பர்க் மீண்டும் நேற்று இரவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதானி குழும முறைகேடு தொடர்பாக 'செபி' யே விசாரிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஹிண்டன்பர்க் நேற்று முன் தினம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது.
செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மாதபி பூரி புச் மற்றும் தவால் தம்பதியர் மறுத்து அறிக்கை வெளியிட்டனர். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதலீட்டு நிதியத்தில் முதலீடு 2015 இல் இருவரும் சிங்கப்பூரில் வசித்தபோது, அதாவது மாதபி செபியில் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்யப்பட்டது என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் தீய உள்நோக்கம் கொண்டவை. பொய்யானவை. பொதுவெளியில் உள்ள தகவல்களை தனது தனிப்பட்ட ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மறுசுழற்சி செய்து கூறியுள்ள அந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்தது.
செபி தலைவர் மாதபி பூரி புச் வெளியிட்ட விளக்கத்திற்கு பிறகு ஹிண்டன்பர்க் நேற்று இரவு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- செபி தலைவர் மாதபி புச் எங்களின் அறிக்கைக்கு கொடுத்த பதில், சில முக்கியமானவைகளை ஒப்புக்கொள்வதோடு, புதிதாக பல முக்கிய கேள்விகளையும் எழுப்புவதாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், தாங்கள் எழுப்பிய விஷயங்கள் தொடர்பாக, செபி தலைவர் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மாதபி புச்சின் பதில், மொரீசியஸ்/பெர்முடா நிதி அமைப்பில் வினோத் அதானியுடன் முதலீடு செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாக உள்ளது.
தனது கணவரின் இளம் வயது தோழருடன் இந்த ஃபண்ட் நடத்தப்பட்டதும் அப்போது அவர் அதானி இயக்குனராக இருந்ததையும் உறுதி செய்துள்ளார். அதானி விவகாரம் தொடர்பான முதலீட்டு நிதிகளை செபியின் பணியாக உள்ளது. எனவே, இது வெளிப்படையாக இரட்டை ஆதாயம் பெறும் விவகாரம் ஆகும்" என்று தெரிவித்துள்ளது












Click it and Unblock the Notifications