பிராமணர்களை அழிக்க வேண்டும் பேச்சுக்காக திமுக மீது நடவடிக்கை தேவை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: பிராமணர்களை அழிக்க வேண்டும் என்ற பேச்சுக்காக திமுக நிர்வாகி மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்திருக்க வேண்டும் என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாகல் இந்து சமாஜ் இயக்கம் நடத்திய பேரணியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப், பிவி நாகரத்னா பெஞ்ச் விசாரித்தது.

உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள், இந்துக்களின் சகோதர சகோதரிகள். அவர்களை பாகிஸ்தானுக்கு திரும்பி செல்லுமாறு முழக்கமிட்டிருக்கிறார்கள். இத்தகைய பேரணிகளில் கண்ணியம் மிக அவசியமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என இந்து சமாஜ் இயக்கத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் எச்சரித்தனர்.
மேலும் வெறுப்பு பிரசாரத்தை தடுக்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? அரசியலில் இருந்து மதத்தை பிரிக்க வேண்டியதும் அவசியம் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதேபோல் இத்தகைய வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது மகாராஷ்டிரா அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த விசாரணையின் போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கேரளாவில் இந்துக்களுக்கு எதிராக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக நிர்வாகி, பிராமணர்களை அழித்தொழிக்க வேண்டும் என பேசியிருக்கிறார் என சுட்டிக்காட்டியதுடன் உச்சநீதிமன்றம் தாமாகவே வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அப்போது நீதிபதி கேஎம் ஜோசப், தந்தை பெரியாரை உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications