ரூட் மாறுதா? பிரதமர் வாய்ப்பை இழந்த சரத்பவார்.. திடீரென வருத்தப்பட்ட மோடி! திரும்பும் ‛‛இந்தியா’’
டெல்லி: ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சமீபத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை கிளப்பினர். இந்நிலையில் தான் சரத்பவார் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு நழுவிட்டது எனவும், அதற்கு முக்கிய காரணம் இதுதான் என பேசி வருத்தப்பட்டுள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜக அரசை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. ‛‛இந்தியா'' என அந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஆம்ஆத்மி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், திமுக, மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்பட மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டணி சார்பில் 2 ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. முதல் கூட்டம் பீகாரிலும், 2வது கூட்டம் பெங்களூரிலும் நடந்து முடிந்துள்ளது. 3வது கூட்டம் மும்பையில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ‛‛இந்தியா'' கூட்டணி பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளது. தற்போதைய சூழலை பொறுத்தமட்டில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தலைவர் யார்? பிரதமர் வேட்பாளர் யார்? தொகுதி பங்கீடு செய்வது எப்படி? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்நிலையில் தான் மேற்கூறிய விஷயங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து போய்விடும் என பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியோ, ஊழல்வாதிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு உள்ளனர். இவர்கள் மக்கள் பிரச்சனைக்காக ஒன்றாக இணையவில்லை. மாறாக அவர்கள் தங்களை விசாரணை அமைப்புகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் இணைந்துள்ளதாக கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில தான் பிரதமர் நரேந்திர மோடி அதுபற்றி திடீரென பேசியுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது கடந்த மாதம் மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் மற்றும் எம்எல்ஏக்கள் அம்மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார், அஜித் பவார் என 2 அணியாக உள்ளது. இப்படி தேசியவாத காங்கிரஸ் 2 ஆக பிரிந்தபோது பிரதமர் மோடி மேற்கூறிய கருத்தை தெரிவித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்த மாதம் தொடக்கத்தில் புனேவில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில் சரத் பவாரும் பங்கேற்று அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டார். இது ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ளவர்களுக்கு ஷாக்காக அமைந்தது. இத்தகைய சூழலில் தான் சரத்பவார் பிரதமர் பதவியை இழந்தது பற்றி மோடி வருத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளன. சரத்பவார் மற்றும் நரேந்திர மோடி இடையேயான இந்த விவகாரம் தான் தற்போது தேசிய அரசியலை பரபரப்பாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications