"இந்துக்களை பாதுகாப்போம்".. உறுதிமொழியோடு மோடிக்கு வந்த போன்கால்.. வங்கதேச தலைவர் திடீர் பேச்சு
டெல்லி: ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதற்கு வங்கதேசத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் வங்கதேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் திடீரென்று இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த மாதம் முதல் தொடர்ந்து நடந்த மாணவர்கள் போராட்டத்தால் 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் அந்த நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரில் நம் நாட்டில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனா நம் நாட்டுன் நல்லுறவில் இருந்து வந்தார்.

இதனால் உயிர் பயத்தில் வந்த ஷேக் ஹசீனாவுக்கு மத்திய அரசு தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளார். இதையடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் உள்ளார். முகமது யூனுஸ் அந்த பொறுப்பை ஏற்றவுடன் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இத்தகைய சூழலில் தான் இன்று முகமது யூனுஸ் திடீரென்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய நிலை பற்றி மோடியிடம், முகமது யூனுஸ் தெரிவித்தார். மேலும் இருநாடுகளின் உறவு முறை பற்றி அவர்கள் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா பக்கப்பலமாக இருந்தது போல் இடைக்கால அரசுக்கும் இந்தியாவின் ஆதரவு வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வேளையில் பிரதமர் மோடி முக்கிய கோரிக்கையை முகமது யூனுஸிடம் வைத்தார். அதாவது வங்கதேசத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழலில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், கோவில்கள், இந்துக்களின் வீடுகள் சூறையாடப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் இந்துக்கள் மட்டுமின்றி அங்கு வாழும் அனைத்து சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை முகமது யூனுஸ் ஏற்று கொண்டுள்ளார். மேலும் இந்துக்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதிமொழி அளித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛வங்கதேச நாட்டின் தலைமை ஆலோசகரும் பேராசிரியருமான முகமது யூனுஸிடம் இருந்து டெலிபோன் கால்வந்தது. அங்கு நிலவும் சூழ்நிலை பற்றி விவாதித்தோம். மேலும் அமைதியான, நிலையான முற்போக்கான வங்கதேசம் உருவாக தேவையான இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தினார். மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதி செய்வதாக தெரிவித்தார்’’ என் கூறியுள்ளார்.
முன்னதாக வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்துக்கு இடையே சிலர் இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு கோரி இந்துக்கள் தலைநகர் டாக்கா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். மேலும் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை சந்தித்தும் பாதுகாப்பு கோரினர். இத்தகைய சூழலில் தான் முகமது யூனுஸ், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசி இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications