பியாந்த்சிங் வழக்கு: ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அமித்ஷாவிடம் அகாலி தள் தலைவர்கள் கோரிக்கை
டெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலையாளியான காலிஸ்தான் தீவிரவாதி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிரோமணி அகாலி தள் தலைவர்கள் இன்று வலியுறுத்தினர்.
சீக்கியர்களுக்கு தனிநாடு கோருகிற அமைப்பு காலிஸ்தான். இந்த அமைப்பு 1995-ல் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் படுகொலை செய்தது.

இவ்வழக்கில் சிக்கிய காலிஸ்தான் தீவிரவாதி ரஜோனாவுக்கு 2007-ல் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ரஜோனாவை 2012-ல் தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் சீக்கியர் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று ரஜோனா தூக்கிலிடப்படவில்லை. பின்னர் குருத்வாரா பிரபந்த கமிட்டி சார்பில் மத்திய அரசிடம்ம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குருநானக் 550வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு ரஜோனாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறையில் அண்மையில் ரஜோனா, தமது தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். குருத்வார பிரபந்த கமிட்டி நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று ரஜோனா தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்.
இந்நிலையில் இன்று சிரோமணி அகாலி தள் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications