யார் இந்த சுபான்ஷு சுக்லா? சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் முதல் இந்தியர்!
டெல்லி: சுனிதா வில்லியம்ஸ், வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்திய விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா, விரைவில் விண்வெளி மையத்துக்குச் செல்ல இருக்கிறார். சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்லும் இந்தியாவின் முதல் விண்வெளி வீரராகும் பெருமையைப் பெற இருக்கிறார் சுபான்ஷு சுக்லா.
ககன்யான் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுபான்ஷு சுக்லா, விரைவில் விண்வெளி மையத்துக்குச் செல்ல இருக்கிறார். ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கேப்டன் சுபான்ஷு சுக்லா பெற இருக்கிறார்.

இந்தியா- நாசா
கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அப்போதைய அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிறகு, அமெரிக்காவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நாசாவுடன் இணைந்து இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி வீரர் தேர்வு வாரியம், இந்திய விமானப்படையின் (IAF) சோதனை விமானிகளின் குழுவிலிருந்து குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்தது.
இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஆக்சியம் ஸ்பெஸ் உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவிருக்கும் ஆக்சியம் - 4 மிஷனுக்காக குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை ஒப்பந்தம் செய்துள்ளது. குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் பேக்-அப் விமானியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த சுபான்ஷு சுக்லா?
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது 14 வயதான சுபான்ஷு சுக்லா, இந்திய விமானப் படை வீரர்களின் வீரத்தால் ஈர்க்கப்பட்டு, இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.
கேப்டன் ஷுபான்ஷு சுக்லா, நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப்படையின் போர் விமானியாக நியமிக்கப்பட்ட சுக்லா, ஃபைட்டர் காம்பாட் லீடர் படிப்பு முடித்தார். Sugoi, MIG-21, MIG-29, Jaguar, Domnier, BAe Hawk மற்றும் An-32 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை சுமார் 3,000 மணி நேரத்துக்கும் மேலாக செலுத்திய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் சுக்லா.
2வது இந்தியர்
விங் கமாண்டர் பதவிக்கு உயர்த்தப்பட்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, மனிதர்களை ஏற்றிச் செல்லும் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணமான ககன்யானுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய விமானப் படை அதிகாரிகளில் ஒருவர்.
1984-ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் போது ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றிருந்தார். ராகேஷ் சர்மாவிற்கு அடுத்து கடந்த 40 ஆண்டுகளில் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் எனும் பெருமை அடைவார் சுபான்ஷு சுக்லா. சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்லும் முதல் இந்தியராக சுபான்ஷு சுக்லா இருப்பார்.

சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதன்மை விண்வெளி வீரராகவும், ஒருவேளை சுக்லா செல்ல முடியாத நிலை ஏற்படும் எனில், அவருக்கு பதில் மாற்று விண்வெளி வீரராக பிரசாந்த் பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆக்சியம்-4 மிஷன்
தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஆக்சியம் ஸ்பேஸ் -இன் நான்காவது மிஷன் இது. இந்த மிஷன் மூலம் தான், குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார். இந்த மிஷன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து துவங்கவுள்ளது.
இந்த விண்கலம் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் உடன் இணைத்து ஏவப்படும். இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உடன், போலந்து, ஹங்கேரி, மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களும் இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க உள்ளனர். இந்தப் பயணம் சுமார் 14 நாட்கள் நீடிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications