குஜராத் கலவரம்: குற்றவாளிகளுக்கு சிறப்பு புலனாய்வு குழு ஆதரவு- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்
டெல்லி: 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு சரியாக விசாரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவகர்கள் வந்த இரு பெட்டிகளில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 59 கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. பிப்ரவரி 28ம் தேதி அதாவது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற மறுநாள், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எஹ்சன் ஜாஃப்ரி, அகமதாபாத் நகரிலுள்ள குல்பர்க் சொசைட்டி என்ற பகுதியில் வைத்து வன்முறைக் கும்பலால் கொலை செய்யப்பட்டார். வன்முறை சம்பவங்களில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நரேந்திர மோடி
நாட்டையே உலுக்கிய இந்த குஜராத் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கலவரம் நடந்தபோது குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. எனவே மோடி, அவரது அமைச்சரவையில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த மாயா கோட்னானி இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களுடன், முன்னாள் பஜ்ரங் தள் தலைவர், வி.எச்.பி முன்னாள் தலைவர் உட்பட 82 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

விடுதலை
நரோடா கேமில் நடந்த கலவரம், நரோடா பாட்டியாவில் நடந்த கலவரம் ஆகியவற்றில் முஸ்லிம்களும் கொல்லப்படுவதற்கு ஏனைய குற்றவாளிகளுடன் இணைந்து கோட்னானி சதி செய்தார் என்கிற விவரம் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டது. நரோடா பாட்டியா படுகொலையில் கொட்னானி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 2018 குஜராத் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு, குஜராத் முதல்வராக இருந்த மோடி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 59 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என 2012-ல் கூறியது. இந்த சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக் கோரி படுகொலை செய்யப்பட்ட ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா, குஜராத் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். அலகாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்தன. இதனைத் தொடர்ந்து ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் 2018-ல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

கபில் சிபல் ஆஜர்
மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவருமான கபில்சிபல் அவருக்காக ஆஜராகி வருகிறார். நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணை நடைபெற்றபோது, பஜ்ரங்தள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலரை காப்பாற்றுவதற்காக சிறப்பு புலனாய்வு குழு முயற்சி செய்கிறது என்று கபில் சிபல் குற்றம்சாட்டினார்.

கலவரத்தின் பின்னணி
விசாரணையே நடைபெறவில்லை. குற்றவாளிகளை காப்பாற்றதான் முயற்சி நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார். ஜாகியா ஜாப்ரி 2006ம் ஆண்டு கொடுத்த புகாரில், இந்த கலவரத்தின் பின்னால் பெரிய சதி இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதில் யாரெல்லாம் பின்னணியில் இருக்கிறார்கள், எந்த மாதிரி அவர்கள் தலையிட்டு இருக்கிறார்கள் என்பது பற்றி விசாரணை நடைபெறவில்லை. விசாரணை களங்கப்பட்டு போய்விட்டது. 2002 ஆம் ஆண்டு கலவரம் நடந்த போது அதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். கலவரத்தை நடத்திக் கொள்வதற்கு அவர்கள் பச்சைக் கொடி காட்டினார்கள். இதன் பின்னணியில் சதி இருப்பதால்தான் எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை. களங்கமான ஒரு விசாரணை நடைபெறுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எப்படி நீதியைப் பெற்று தர முடியும்.

சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம்
பாரபட்சமற்ற சரியான விசாரணை இருந்தால் மட்டும் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர முடியும். அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவு சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று சொல்கிறது ஆனால் விசாரணை அமைப்புகள் அப்படி செயல்படவில்லை. குஜராத் காவல்துறை இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. ஆனால் இந்த சிறப்பு புலனாய்வு குழு சரியாக விசாரிக்கவில்லை. நான் குற்றம் சுமத்தவில்லை. தகவலுக்காக பகிர்கிறேன். இந்த கலவரத்தின் பின்னாலுள்ள சதிகாரர்கள் தொடர்பான பல முக்கியமான ஆவணங்கள், புலனாய்வு நிறுவனங்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட எதையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க தயாராக இல்லை.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்
1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் கலவரம் நடைபெற்றபோது (இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து நடந்த கலவரம்) நான் வசித்த பகுதிக்கு அருகே இருந்த இரண்டு வீடுகளை மட்டும் வன்முறை கும்பல் குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அங்கே சீக்கியர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்து கொண்டு திட்டமிட்டு இந்த தாக்குதல் நடைபெற்றது. குஜராத்திலும் இப்படித்தான் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அதேநேரம் சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் ஆஜரான முன்னாள் அட்டார்னி ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோகத்கி, ஜாகியா ஜாப்ரி கொடுத்த புகாரை முழுக்க விசாரணை நடத்திய பிறகுதான் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்று வாதம் செய்தார். இதனிடையே இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 16ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும்.












Click it and Unblock the Notifications