நாகாலாந்து: பாதுகாப்பு படையினரால் 13 பேர் படுகொலை- அமித்ஷா இரங்கல்- விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: நாகாலாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தின் ஓடிங் பகுதியில் சொந்த ஊர் திரும்புவதற்காக நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் காத்திருந்தனர். இவர்கள் நாகாலாந்தில் தனிநாடு கோரும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகாலாந்தில் பதற்றம்
பாதுகாப்பு படையினரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு படையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நாகாலாந்து முதல்வர் மற்றும் பழங்குடிகளின் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு- அமித்ஷா
இச்சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாகாலாந்தின் மோன் மாவட்டம் ஒடிங்கில் நடைபெற்ற சம்பவம் எதிர்பாராத துயரமாகும். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு நீதியை உறுதி செய்வோம் என கூறியுள்ளார் அமித்ஷா.

தீவிரவாதிகள் என சந்தேகம்
நாகாலாந்தில் தனிநாடு கோருகிற என்.எஸ்.சி.என்(கப்லாங்) பிரிவு தீவிரவாதிகள்தான் மியான்மர் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியதாக தவறாக சந்தேகித்து பாதுகாப்பு படையினர் இத்தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். மேலும் பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட இருப்பதாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜவான் ஒருவர் பலி?
இதனிடையே பொதுமக்கள் தாக்குதலில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த கெளதம் லால் என்ற வீரர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்கஜ் நாக், சுபாஷ் பாஸுமதாரி, பூரன் பூரி, அஜஸ் துரா, ஹரேந்திர தாபா மற்றும் அதாரி ஆகிய 6 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வடகிழக்கு மாநில மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications