15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்த பெண் பயணி.. காட்டிக் கொடுத்த மோப்ப நாய்.. எப்படி?
டெல்லி: தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பாரீஸ் நகருக்கு டெல்லி வழியாக பயணித்த ஒரு பெண் பயணியை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்படி சோதனை செய்து பார்த்த போது, சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பது தெரியவந்தது. அவரை சோதித்த மோப்ப நாய், ரூ.15 கோடி போதைப்பொருள் வைத்திருப்பதை கண்டுபிடித்தது. அந்த பெண் பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தி வருகிறது. தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க நவீன தொழில்நுட்பங்களையும், பாரம்பரிய முறைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கடைபிடிக்கிறார்கள். அந்த வகையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பாரீஸ் நகருக்கு டெல்லி வழியாக சென்ற விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணித்துக் கொணடிருந்தார்.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்களாக இருந்தாலும் சோதனை செய்யப்படுவது வழக்கமாகும். அப்படித்தான் பெண் பயணியின் உடைமைகளை அதிகாரிகள் 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் என்ன பொருள் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை..
இதனைத் தொடர்ந்து மோப்பநாயை வரவழைத்து அதனை மோப்பம் பிடிக்கச் செய்து பார்த்தனர். நாய் மோப்பம் பிடித்து, அது போதைப்பொருள் என சுட்டிக்காட்டியது. உடைமைகளை திறந்து ஆய்வு செய்ததில், 'ஹைட்ரோபோபிக்' என்கிற உயர்ரக போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் சுமார் 15 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் ஆகும். பெண் பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
மோப்ப நாய்கள் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பலமுறை நடந்துள்ளது. அண்மையில் குஜராத்தில் கோடி ரூபாய் பணத்தை திருடியவரை மோப்ப நாய் கண்டுபிடித்தது. அதுபற்றியும் பார்ப்போம். குஜராத் மாநிலம் அமதாபாத் மாவட்டம் சரக்வாலா கிராமத்தில் வசித்து வந்த விவசாயிக்கு அண்மையில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. அவருக்கு சொந்தமாக கிராமத்தை ஒட்டி விவசாய இடம் இருந்தது. அருகிலேயே தொல்லியல் துறை அமைந்துள்ளது. இதனால் அவரது இடத்தை, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் கேட்டுள்ளனர். அவரும் அந்த இடத்தை கொடுத்தார். இதன் மூலம் அந்த விவசாயி ஒரே நாளில் கோடீசுவரர் ஆனார். நிலம் விற்ற பணம் ரூ.1 கோடியே 7 லட்சத்தை தனது வீட்டில் வைத்திருந்தார்.
கோடி ரூபாய்க்கு பணம் வந்ததை கண்டுபிடித்த அக்கம் பக்க வீட்டார், மொத்த பணத்தையும் திருடி செல்ல திட்டம் தீட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 12-ந்தேதி கோடீஸ்வர விவசாயி வெளியூர் சென்றார். நவராத்திரி நேரத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் விவசாயி வீட்டில் இருந்த மொத்த பணத்தையும் கொள்ளையடித்தார்கள்.
இதனிடையே வீட்டை விட்டு வெளியே சென்ற விவசாயி, வீடு திரும்பியுள்ளார். அங்கு வைத்திருந்த பணம் மாயமானதால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள 30 சந்தேக நபர்களையும், 14 திருட்டு குற்றவாளிகளையும் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அவர்களை வரிசையாக நிற்க வைத்து போலீஸ் மோப்ப நாய் பென்னியை விட்டு மோப்பம் பிடிக்கச் செய்தனர். அப்போது புத்தா சோளங்கி என்பவரின் அருகே நாய் சிறிது நேரம் அப்படியே நின்றது.
கொள்ளை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்தபோதும் புத்தாவின் வீடு அருகே சென்று மோப்ப நாய் நின்றது. இதனால் போலீசார் புத்தாவின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கு திருடு போன பணம் ரூ.53.9 லட்சம் இருந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விக்ரம் சோளங்கி என்பருடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டதும், மீதி தொகை அவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து விக்ரம் சோளங்கியின் வீட்டில் இருந்து திருட்டுப்போன மீதி பணத்தை போலீசார் மீட்டனர்.












Click it and Unblock the Notifications