புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத்! தேசிய அளவில் கால் பதிக்க திட்டம்? அப்போ காங்.? பரபர தகவல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ள குலாம் நபி ஆசாத்தின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு இப்போது பொல்லாத காலம் போல! அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து அங்கிருந்து விலகி வருவது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதற்கான நடவடிக்கையும் பெரியளவில் இல்லை என்றே கூறப்படுகிறது.

காங்கிரஸ்
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தேர்தல்களில் தோல்விகளையே சந்தித்து வருகிறது. 2014 முதல் 2022 வரை நடந்த 49 சட்டசபைத் தேர்தல்களில் 39 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற முடியாமல் போன மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியால் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கூட காங்கிரஸ் கையைவிட்டுப் போனது.

விமர்சனம்
தேர்தல்கள் தான் என்றால் மக்கள் மன்றத்திலும் கூட காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்வதாக இல்லை. ட்விட்டரில் மட்டும் அரசை விமர்சித்து அரசியல் செய்யும் காங்கிரஸ் தலைமை மக்களுக்காகப் போராட்டங்கள் செய்ய வீதிகளில் இறங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக உள்ளது. இதன் காரணமாக பாஜக இல்லாத பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் கூட, மாற்றுக்கட்சிக்காக மக்கள் செல்கிறார்களே தவிர, காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பதில்லை.

குலாம் நபி ஆசாத்
இக்கட்டான சூழலில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாக இன்று குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில், ராகுல் காந்தியின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி நடவடிக்கை குழந்தைத் தனமாக இருப்பதாகவும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனைகளை நடத்துவதில்லை என்றும் சாடியுள்ளார்.

பாஜகவில் ஐக்கியம்?
இதற்குக் காங்கிரஸ் தலைமையால் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்ட நபர், தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி உண்மை முகத்தை வெளிக்காட்டி துரோகத்தைச் செய்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதற்கிடையே குலாம் நபி ஆசாத்தின் அடுத்தகட்ட திட்டங்கள் என்னவாக இருக்கும் எனப் பல யூகங்கள் பரவ தொடங்கின. குறிப்பாக அவர் பாஜகவில் இணையலாம் எனக் கூறப்பட்டது. அதற்கேற்ப குலாம் நபி ஆசாத்திற்கு பாஜக சார்பில் அக்கட்சியின் குல்தீப் பிஷ்னோய் அழைப்பும் விடுத்திருந்தார்.

சொந்த கட்சி
இந்தச் சூழலில் குலாம் நபி ஆசாத்தே அவரது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விளக்கி உள்ளார். ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை முற்றிலுமாக மறுத்த அவர், "நான் எனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளேன். காஷ்மீரில் நான் எனது சொந்தக் கட்சியைத் தொடங்குவேன். தேசிய அளவில் கட்சியை விரிவுபடுத்துவது குறித்து பின்னர் முடிவு செய்வேன்" என்றார்.

விளக்கம்
ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்த நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், ""தனிப்பட்ட அளவில் நேரு குடும்பத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இங்கு நான் தனிப்பட்ட உறவைப் பற்றிப் பேசவில்லை. காங்கிரஸின் வீழ்ச்சியைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்" எனத் தெளிவாகப் பதில் அளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications