இந்தியாவில் பாயப்போகும் தென் ஆப்பிரிக்க சிறுத்தைகள்.. வன விருந்தாளிகளை அனுப்ப சிரில் ரமபோசா ஒப்புதல்
டெல்லி: மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் கடந்த 2022 ஆண்டு நமீபியாவில் இருந்து வந்த 8 சீட்டா வகை சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில், ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் திறந்து விடப்பட்டன.
8 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்ட நிலையில் பிரதமர் மோடி 3 சிறுத்தைகளை அவர் திறந்து விட்டார். சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் அழிந்து வரும் நிலையில் அந்த இனத்தை சேர்ந்த சிறுத்தைகளை மோடி திறந்துவிட்டு இருந்தார்.

12 சிறுத்தைகள்
இந்த நிலையில் மேலும் 12 சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட இருக்கின்றன. கடந்த முறை நமீபியா நாட்டில் இருந்து சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட உள்ளன.

சீட்டா வகை சிறுத்தைகள்
இந்தியா வனப்பகுதிகளில் அழிந்த விலங்குகளாக கருதப்படும் சீட்டா வகை சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வர கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் திட்டம் தீட்டப்பட்டது. இந்திய வனவியல் நிறுவனத்தால் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 12 முதல் 14 சிறுத்தைகளை இந்திய வனப்பகுதிகளில் விட திட்டமிடப்பட்டது.

நமீபியா சிறுத்தைகள்
இதற்கான ஒப்புதல் இந்திய அரசிடம் இருந்தும், நமீபியா அரசிடம் இருந்தும் கிடைத்ததால் கடந்த முறை 8 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டு திறந்து விடப்பட்டன. இதேபோல் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சீட்டா சிறுத்தைகளையும் தங்களுக்கு வழங்குமாறு இந்தியா கோரி இருந்தது. இது தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தென்னாபிரிக்கா அதிபர் ஒப்புதல்
இந்த திட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் தென் ஆப்பிரிக்க அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "அதிபர் சிரில் ரமபோசா இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால், இந்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்." என்றார். மத்திய வனவியல் தலைமை இயக்குநர் சந்திர பிரகாஷ் கோயல், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாக செயலாளர் எஸ்.பி.யாதவ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வரும் 13 ஆம் தேதி டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு சென்று இருக்கிறார்கள்.

ரூ.38.7 கோடி ஒதுக்கீடு
இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே தெரிவிக்கையில், "புலிகள் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.38.7 கோடி, இந்தியாவிற்கு சிறுத்தைகளை கொண்டு வருவதற்காக ஒதுக்கப்பட்டது. 2021-22 முதல் 2025-26 ஆண்டுகளுக்குள் சிறுத்தைகள் கொண்டு அவரப்படும்.

8 சிறுத்தைகள்
நமீபியா அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 பெண் சிறுத்தைகள் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் திறந்துவிடப்பட்டன. 8 சிறுத்தைகளும் தற்போது குனோ தேசிய பூங்காவில் பாதுகாப்பாகவும், நல்ல நிலையிலும் உள்ளன." என்றார்.

6 சதுர கிமீ பரப்பளவு
அந்த சிறுத்தைகளில் 3 பெண் சிறுத்தைகள் மட்டும் தனிமைப்படுத்தலில் இருந்து திறந்துவிடப்பட்டு மற்ற சிறுத்தைகளுடன் கடந்த நவம்பர் மாதம் இணைக்கப்பட்டன. இதுகுறித்து குனோ தேசிய பூங்கா இயக்குநர் உத்தம் சர்மா தெரிவிக்கையில், "தற்போது சிறுத்தைகள் இந்த சூழலுக்கு பழகிவிட்டேன். இந்த வனப்பகுதி 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஆண் சிறுத்தைகள் வேட்டையாடவும் தொடங்கிவிட்டன." என்றார்.












Click it and Unblock the Notifications