45 தமிழக மீனவர்களுக்கு ஒரே நாளில் ரூ10 கோடி அபராதம் விதித்த இலங்கை கோர்ட்- அதிர்ச்சியில் உறவினர்கள்!
டெல்லி: இலங்கையில் தமிழ்நாட்டு மீனவர்கள் 45 பேருக்கு ரூ10 கோடி அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம். தமிழ்நாட்டு கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை எல்லை தாண்டியதாக கைது செய்த இலங்கை தற்போது 45 மீனவர்களுக்கு ரூ10 கோடி அபராதத் தொகை விதித்திருப்பது மீனவர்களின் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டு கடல் எல்லையில் பாரம்பரியாக மீன்பிடிக்கும் பகுதியில் தமிழக மீனவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ அத்துமீறி தங்களது எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்து வருகிறது. இந்திய கடற்படை, கடலோர காவல்படை இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொண்டதும் இல்லை.

அண்மைக்காலமாக தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, மொட்டை அடித்து அவமரியாதை செய்வது, பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பது என இலங்கையின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
45 பேருக்கு ரூ10 கோடி அபராதம்: இந்த நிலையில் இலங்கை கடற்படை கைது செய்த தமிழ்நாட்டின் 35 நாட்டுப் படகு மீனவர்கள், 10 விசைப் படகு மீனவர்கள் மொத்தம் 45 பேருக்கு ரூ10 கோடி அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
35 பேர் கைது: இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படை இடைமறித்தது. மேலும் அந்த 4 படகுகளில் இருந்த 35 மீனவர்களும் எல்லை தாண்டிவிட்டதாக கூறி அனைவரையும் கடந்த ஆகஸ்ட் 8-ந் தேதி கைது செய்தது இலங்கை கடற்படை எல்லை தாண்டுதல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு 35 பேரும் புத்தளம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள்: 35 மீனவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தமிழக மீனவர்களின் வழக்கை விசாரித்த நீதிபதி விமலரத்னா, 35 மீனவர்களில் 12 பேருக்கு தலா ரூ35, மற்றவர்களுக்கு தலா ரூ10 லட்சம் அபராதம் விதித்தார். இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தருவைக்குளம் மீனவர்கள்: இதேபோல தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்திலிருந்து சென்ற 10 மீனவர்களும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்தோனி தேன் டெனிலா என்பவரது விசைப்படகில் இந்த 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையால் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டனர். இந்த 10 மீனவர்களுக்கும் தலா ரூ35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது புத்தளம் நீதிமன்றம். அதாவது 45 தமிழக மீனவர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி அபராதம் விதித்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மீனவர்களின் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications