நண்பர் ராஜபக்சேவை சந்திக்க விரைவில் இலங்கை செல்வேன்... சுப்ரமணிய சுவாமி தகவல்..!
டெல்லி: நண்பர் ராஜபக்சேவை சந்தித்து பேச விரைவில் இலங்கை செல்லவுள்ளதாக கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி.
இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மொரகோடாவை தமது இல்லத்துக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்த இவர், இலங்கை பயணம் செல்லவுள்ள தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சுப்ரமணிய சுவாமி
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். விடுதலை புலிகள் விவகாரத்தில் மகிந்த ராஜபக்சேவின் நடவடிக்கைகளை பாராட்டியவர். ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக பிரகடனம் செய்ய வேண்டும் என தமிழ் தேசியவாதிகளும், ஈழத்தமிழ் ஆதரவாளர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் சூழலில் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருபவர் சுப்ரமணியசுவாமி.

திருமண விழா
கடந்த 2019-ம் ஆண்டு மகிந்த ராஜபக்சேவின் மகன் திருமணம் இலங்கையில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அப்போதே இவருக்கு இங்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர் எதையும் பொருட்படுத்தாமல் தமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று வருகிறார். தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தினருடன் இணக்கம் காட்டி வரும் அவர், இந்தியாவுக்கான இலங்கை உயர் அதிகாரிகளுக்கும் அவ்வப்போது ஆலோசனைகள் நல்கி வருகிறார்.

தேநீர் விருந்து
அந்த வகையில் இந்தியாவுக்கான இலங்கை ஹை கமிஷனர் மிலிந்தா மொரோகோடாவை தமது இல்லத்துக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்த சுப்ரமணிய சுவாமி, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சில மணி நேரம் ஆலோசித்திருக்கிறார். இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர், விரைவில் இலங்கைக்கு சென்று நண்பர் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பேன் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

விவாதப்பொருள்
இன்னும் தமது பயணம் விவரம் இறுதி செய்யப்படவில்லை என்றும் பயண விவரம் வடிவமைக்கப்பட்ட பிறகு அது குறித்த மேலும் சில தகவல்களை ட்விட்டரில் பகிர்வதாக தெரிவித்துள்ளார். சுப்ரமணிய சுவாமியின் இந்த ட்விட்டர் பதிவு தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications