சுகேஷ் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்.. அமைச்சருக்கு ரூ.10 கோடி, சீட் பெற ரூ.50 கோடி.. அதிரும் ஆம் ஆத்மி!
டெல்லி : சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தான் ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ரூ. 10 கோடி கொடுத்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
சிறையில் தனக்கு பாதுகாப்பு அளிக்கவும், வசதிகளை செய்து கொடுக்கவும் மாதாமாதம் ரூ. 2 கோடியை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கேட்டதாகவும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்தவாறே டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் சுகேஷ் சந்திரசேகர். அந்தக் கடிதத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் தென் மாநிலங்களில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காகவும், ராஜ்யசபா சீட் பெறுவதற்கும் ரூ. 50 கோடி நன்கொடை வழங்கியதாகவும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர்
தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் உள்ளன. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ரோஹினி சிறையில் இருந்தபோதே பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்ட வந்த தகவல் பரபரப்பைக் கிளப்பியது.

சிறையில் இருந்தபடியே மோசடி
இதையடுத்து சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் ஆகியோர் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர். சிறையில் இருந்தவாறே, சிறையில் அடைக்கப்பட்ட பெரிய தொழிலதிபர்களுக்கு ஜாமீன் வாங்கி தருவதாக அரசு உயரதிகாரிகள் போல போனில் பேசி, அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து சுகேஷ் சந்திரசேகர் சுமார் ரூ.200 கோடி பெற்று ஏமாற்றியதாகக் கூறப்பட்டது.

திகாரில் தனி சாம்ராஜ்ஜியம்
சுகேஷ் சந்திரசேகருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகள் மாதம் ரூ. 1.5 கோடி லஞ்சம் பெற்று வந்தனர் என குற்றச்சாட்டு எழுந்தது. திகார் சிறையில் சுகேஷ் சந்திரசேகர், செல்போன், தனி அலுவலகம் என சகல வசதிகளோடு தனி சாம்ராஜ்ஜியமே நடத்தியது தெரியவந்ததையடுத்து அவர் டெல்லி மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறைத்துறை அதிகாரிகள்
சிறையில், சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியது தொடர்பாக 81 அதிகாரிகள் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகருக்கு உதவிய சிறைத்துறை அதிகாரிகள் 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறைத்துறை அதிகாரிகளிடம்
விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, டெல்லி துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா சமீபத்தில் அனுமதி அளித்தார்.

ஆம் ஆத்மி அமைச்சருக்கு ரூ.10 கோடி
தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக டெல்லி ஆளுநர் சக்சேனாவுக்கு, சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி ஆளுநருக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் சுகேஷ், "2017ல் நான் கைது செய்யப்பட்ட பிறகு, நான் திகார் சிறையில் அடைக்கப்பட்டேன். சிறைத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் பலமுறை என்னைச் சந்தித்தார்.

மாதாமாதம் 2 கோடி கோடி
2019 ஆம் ஆண்டில் மீண்டும் என்னைச் சந்தித்த சத்யேந்திர ஜெயின் பாதுகாப்புப் பணமாகவும், சிறைக்குள் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும் என்னிடம் ஒவ்வொரு மாதமும் ரூ. 2 கோடி கேட்டார். அவரிடம் ரூ. 10 கோடி பணம் அளித்துள்ளேன். அவருக்கு பணம் கொடுத்ததை சிபிஐ-யிடம் கூறியதால், குற்றச்சாட்டை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டினார்" என்றும் சுகேஷ் சந்திரசேகர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா சீட் பெற
ஆம் ஆத்மி கட்சியின் சதியேந்திர ஜெயினை தனக்கு 2015 ஆம் ஆண்டு முதல் தெரியும் என்றும், தென்னிந்தியாவில் தனக்கு முக்கியமான கட்சிப் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாலும், ராஜ்யசபாவுக்கு செல்ல உதவுவதாக உறுதி அளித்ததாலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 50 கோடிக்கும் மேலாக வழங்கியதாகவும் சுகேஷ் சந்திரசேகர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்யேந்திர ஜெயின்
சுகேஷ் சந்திரசேகரின் இந்தக் கடிதம் ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. டெல்லி சுகாதார அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்திர ஜெயின் இந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனங்களின் ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications