கத்தை கத்தையாக எரிந்த பணம்.. டெல்லி நீதிபதி வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தை விசாரிக்க நேற்று 3 நீதிபதிகள் குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதில், கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில், கிடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த யஸ்வந்த் ஷர்மா வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. யஸ்வந்த் வர்மா பண்டிகைக்காக வெளியூர் சென்ற நிலையில் அருகில் இருந்தோர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்
அப்போது யஸ்வந்த் வர்மாவின் வீட்டின் மற்றொரு அறையில் கட்டுக் கட்டாக பணம், நகைகள் ஆகியவை இருந்தது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்த நிலையில் மேலும் சில பணக் கட்டுகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த பணக் கட்டுகள், மற்றும் மீதமிருந்த பணக் கட்டுகள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை
அதேநேரம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதித்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பிரச்சினை நாடாளுமன்றத்திலும் பலமாக எதிரொலித்தது. இதற்கிடையே நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட கொலீஜியம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் உத்தரவிட்டது. அதன்படி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் விசாரணை நடத்தினார். குறிப்பாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடந்தது.
3 நீதிபதிகள் குழு
பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அவர் சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில், பணம் சிக்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டார். இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.
என்னை சிக்க வைக்க சதி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் உள்ளிட்ட ஆவணங்களும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வெளிப்படத்தன்மையை உறுதி செய்யும் விதமாக இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கத்தை கத்தையாக பணம் எரிந்த நிலையில் கிடக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
டெல்லி காவல்துறையால் நீதிபதியிடம் அளிக்கப்பட்ட இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் தன் மீதான குற்றச்சாட்டை நீதிபதி யஷ்வந்த் ஷர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த வீடியோவில் இருப்பது வீட்டில் இல்லாத ஒரு காட்சியாக உள்ளது. இது என்னை சிக்க வைக்க நடக்கும் சதி போல தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications