சொத்து விற்பனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு.. சொத்து வாங்குவோர் அறிய வேண்டியவை
டெல்லி: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுடன் தொடர்புடைய சொத்து விற்பனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கியமான புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுடன் தொடர்புடைய சொத்து விற்பனையை ரத்து செய்வதற்கு வழக்கு தொடர வேண்டியது கட்டாயம் இல்லை என்றும், ஒரு மைனரின் பாதுகாவலரால், அவரது அசையாச் சொத்தின் எந்தப் பகுதியையும் அடமானம் வைக்கவோ, விற்கவோ, பரிசளிக்கவோ அல்லது வேறு விதமாக மாற்றவோ முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
அதாவது இன்னும் தெளிவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கூற வேண்டும் என்றால், ஒரு மைனரின் இயற்கை பாதுகாவலர், நீதிமன்றத்தின் முன் அனுமதி இன்றி, மைனரின் அசையாச் சொத்தை விற்பனை செய்தால், அந்த பரிவர்த்தனை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை வழங்கி உள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ருத்ரப்பா என்பவர், தனது 18 வயதுக்கு கீழ் (மைனர்) உள்ள தனது 3 மகன்களின் பெயரில் 2 மனைகளை வாங்கியிருக்கிறார். பின்னர் மகன்கள் 18 வயதை எட்டுவதற்கு முன்னரே அந்த சொத்துகளை 3-ம் நபருக்கு விற்பனை செய்தார். ஆனால் மைனர் சொத்துக்களை விற்பதற்காக, மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டு முறையாக அவர் அனுமதியும் பெறவில்லை.
ஆனால் மகன்கள் வளர்ந்த பிறகு, அவர்கள் தங்கள் தாயுடன் சேர்ந்து 2 மனைகளையும் மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனால் இந்த சொத்துகள் தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் நீண்ட காலமாக சிவில் வழக்கு நடந்தது. இதில் கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், ருத்ரப்பாவின் மகன்கள் தங்கள் தந்தையின் விற்பனையை ரத்து செய்ய கோர்ட்டில் முறைப்படி வழக்கு தாக்கல் செய்யாததால் ருத்ரப்பா செய்த விற்பனை செல்லும் என அறிவித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ருத்ரப்பாவின் மகன்கள் மேல்முறையீடு செய்தனர் இதை நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் பிரசன்னா வரலே அமர்வு விசாரித்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், மைனர் சொத்து விற்பனை தொடர்பாக புதிய உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அந்த தீர்ப்பின் விவரம் வருமாறு: 18 வயதுக்கு உட்பட்டவர்களுடன் தொடர்புடைய சொத்து விற்பனையை ரத்து செய்வதற்கு வழக்கு தொடர வேண்டியது கட்டாயம் இல்லை . இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டப்பிரிவு 7 மற்றும் 8-ன்படி, ஒரு மைனரின் இயற்கையான பாதுகாவலரால், மைனரின் அசையாச் சொத்தின் எந்தப் பகுதியையும் அடமானம் வைக்கவோ, விற்கவோ, பரிசளிக்கவோ அல்லது வேறுவிதமாக மாற்றவோ முடியாது.
மேலும் அத்தகைய சொத்தின் எந்தப் பகுதியையும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அல்லது கோர்ட்டு முன் அனுமதியின்றி மைனர் மேஜர் ஆகும் தேதிக்கு அப்பால் ஒரு வருடத்திற்கும் மேலாக நீட்டிக்கவோ குத்தகைக்கு விடவோ சட்டத்தில் எந்த அதிகாரமும் கிடையாது. ஆகவே மைனர் ஒருவரின் சொத்து மாற்றத்துக்கு நீதிமன்ற அனுமதி முக்கியமாகும். அவ்வாறு 18 வயதுக்கு உட்பட்டவருடன் தொடர்புடைய சொத்தை நீதிமன்ற அனுமதியின்றி விற்பனை செய்தது செல்லாத பரிவர்த்தனை ஆகும். அவரது பாதுகாவலரால் செயல்படுத்தப்பட்ட இந்த செல்லாத பரிவர்த்தனையை, அந்த மைனர் 18 வயதை அடைந்தவுடன் ரத்து செய்ய முடியும்" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications