மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்!
டெல்லி: பெண்களுக்குக் கட்டாய மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டம், பெண்களின் வேலைவாய்ப்பையே மோசமாகப் பாதிக்கும் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். இதுபோன்ற ஒரு சட்டத்தை இயற்றினால், முதலாளிகள் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். இது தொடர்பான வழக்கு விசாரணை குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் இப்போது பல்வேறு நிறுவனங்களும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குகிறது. மாதம் ஒரு நாள் இந்த மாதவிடாய் விடுப்புகளை எடுத்துக் கொள்ளலாம் எனப் பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கிடையே நாடு முழுக்க அனைத்து பெண்களுக்கும் கட்டாயம் மாதவிடாய் விடுப்புகளை அளிக்க வேண்டும் எனச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது இதுபோல ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் அது பெண்களின் வேலைவாய்ப்பையே மோசமாகப் பாதிக்கும் என்றும் யாரும் பெண்களை வேலைக்கு எடுக்காத சூழல் கூட உருவாகலாம் என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
மேலும், இது போன்ற சட்டம் பணியிடங்களில் பெண்களிடையே மனரீதியான பயத்தையும், தங்களை'ஆண்களைவிடக் குறைவானவர்கள் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும் எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார். மாநில அரசுகள் மாதவிடாய் விடுப்பு விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது தலைமை நீதிபதி இந்த கருத்தைத் தெரிவித்தார்.
யாரும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள்
அவர் மேலும், "விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேறு, சென்செஷன் செய்வது வேறு... ஆனால், மாதவிடாய் விடுப்பைக் கட்டாயமாக்கும் ஒரு சட்டத்தை நீங்கள் கொண்டு வரும்போது, யாரும் அவர்களை (பெண்களை) வேலைக்கு எடுக்க மாட்டார்கள். உங்களுக்கு முதலாளிகளின் மனநிலை தெரியாது. அத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் அவர்கள் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்" என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
படிக்கும் பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என இரு தரப்பினருக்கும் மாதவிடாய் காலத்தில் விடுப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மனுதாரர் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இத்தகைய மனுக்கள் பயத்தை உருவாக்குவதற்காகவே தாக்கல் செய்யப்படுகின்றன எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சட்டம் வந்தால், 'பெண்களைத் தாழ்ந்தவர்கள் என்று கூறி, மாதவிடாய் அவர்களுக்கு 'மோசமான' ஒரு நிகழ்வு என்று சொல்வார்கள்,' என்றார்.
வாதம்
மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத், 2013ல் கேரள அரசு தனது மாநிலப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கியதை சுட்டிக்காட்டினார். அப்போது, இந்தப் புதிய விதிமுறைகள், "பாலின சமத்துவ சமுதாயத்தை உணரும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதி" என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற சலுகைகளை வழங்கியுள்ளன என்பதையும் ஷம்ஷாத் சுட்டிக்காட்டினார்.
ஏற்க மறுப்பு
ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் தன்னார்வமானவை என்பதைத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். அவர் மேலும், "சட்டமாகக் கட்டாயப்படுத்தப்படும்போது, யாரும் அவர்களுக்கு வேலை தர மாட்டார்கள்.. நீதித்துறை அல்லது அரசு வேலைகளில் யாரும் அவர்களை எடுக்க மாட்டார்கள்... அவர்களின் கேரியர் முடிந்துவிடும். நீங்கள் வீட்டிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள்,” என்றார்.
முன்னதாக ஜனவரியில், உச்ச நீதிமன்றம் மாதவிடாய் சுகாதாரம் குறித்த முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில் மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கை, கண்ணியம், சுகாதாரம் மற்றும் கல்விக்கான உரிமையின் ஒருங்கிணைந்த பகுதி என்று அங்கீகரித்தது. அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவின் கீழ், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் சுகாதார உரிமையைப் பாதுகாப்பது அரசுகளின் கடமையாகும் என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications