"SIR பணிகளை முடிக்கவே 80 நாட்கள் ஆகும்.!" உச்ச நீதிமன்றம் பிறப்பித்த மிக முக்கிய உத்தரவு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்து வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. கோரிக்கைகள் மிக அதிகமாக இருப்பதால் தற்போதுள்ள அதிகாரிகளை வைத்து எஸ்ஐஆர் பணிகளை முழுமையாக முடிக்க 80 நாட்கள் வரை ஆகலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வரும் சூழலில், இந்த விவகாரத்தில் மம்தா அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே மோதல் தொடர்கிறது. இது தொடர்பாக மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

அண்டை மாநில நீதிபதிகள்
இதனால் உச்ச நீதிமன்றமே பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது நீதிபதிகள் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு உதவ, அண்டை மாநிலங்களான ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவிலிருந்து சிவில் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஏராளமான கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்தைக் கவனத்தில் சூர்யா காந்த் அமர்வு கருத்தில் கொண்டது. எஸ்ஐஆர் பணிகளுக்கு 250 மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மிக அதிகக் கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதால் ஆட்சேபணைகளை கையாள சுமார் 80 நாட்கள் ஆகும் என அக்கடிதம் தெரிவித்தது.
80 நாட்கள் ஆகும்
சுமார் 80 லட்சம் முரண்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத மனுக்கள் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 250 மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதிகள் 50 லட்சம் கோரிக்கைகளைக் கையாள நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒரு நாளைக்கு 250 வழக்குகளை ஒரு அதிகாரி கையாண்டாலும், பணி முடிக்கக் கிட்டத்தட்ட 80 நாட்கள் ஆகும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த தீவிரமான சூழ்நிலையையும் கால அவகாசம் போதியளவில் இல்லாததையும் கருத்தில் கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க சிவில் நீதிபதிகளை நியமிக்க அமர்வு அனுமதித்தது. மேலும், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்தும் நீதிபதிகளை நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அதிகாரிகளின் பயணம் மற்றும் தங்குமிடச் செலவுகளை தேர்தல் ஆணையம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சிறப்பு அதிகாரிகள்
அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலைப் பிப்ரவரி 28ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சரிபார்ப்பு முழுமையடையாவிட்டால் அதன் பிறகு கூடுதல் பட்டியல்களைத் தொடர்ந்து வெளியிடலாம் எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
பின்னணி
முன்னதாக கடந்த 20ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தான் நீதிபதிகள் தேர்தல் ஆணையம் மற்றும் மேற்கு வங்கம் இடையே நம்பிக்கையின்மை இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், SIR பணிகளுக்கு உதவப் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்கவும் கொல்கத்தா ஐகோர்ட்டிற்கு அனுமதி அளித்தது.
ஆட்சேபணைகள் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்க நீதிபதிகள் மட்டும் போதாது என்பதாலேயே அண்டை மாநிலங்களான ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்தும் நீதிபதிகளை நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications