கிருஷ்ணஜென்ம பூமி.. உபியில் 100 வீடுகள் இடிப்பு! நிறுத்த சொன்ன உச்சநீதிமன்றம்
டெல்லி: கிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் 10 நாட்களுக்கு தற்போதைய நிலையையே தொடர ரயில்வே நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்து இருந்த பாபர் மசூதியை ராமஜென்ம பூமி என்று கூறி இந்துத்துவ அமைப்புகள் இடித்தன. பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாபர் மசூதி தீர்ப்பு வெளியான பின்னர் இந்துத்துவ அமைப்பினர் அடுத்தடுத்த மசூதிகளை சுட்டிக்காட்டி அதையும் இடித்துவிட்டு கோயில் கட்டப்போவதாக தெரிவித்தனர். அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் உள்ள ஞானவாபி மசூதியும் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மசூதிக்கு உள்ள இந்திய தொல்லியல் துறை சோதனையும் நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கிருஷ்ண ஜென்ம பூமி என்று சொல்லி உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஈத்கா மசூதியும் இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவாவினர் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ண ஜென்ம பூமி அருகே சட்டவிரோதமாக பல குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி ரயில் நிர்வாகம் புல்டோசர் மூலம் அவற்றை இடித்து தள்ளியது. இப்படி நூற்றுக்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டு அதில் வசித்த மக்கள் நடுத்தெருவுக்கு வந்தனர்.
மேலும் 80 வீடுகள் அந்த இடத்தில் இடிக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில், இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், சஞ்சய் குமார் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் யாகுப் ஷா ஆஜராகி வாதிட்டார். அவர், "இதுவரை 100 வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. 70 முதல் 80 வரையிலான வீடுகள் மட்டுமே மீதம் உள்ளன. உத்தரப்பிரதேச நீதிமன்றங்கள் எல்லாம் மூடப்பட்ட சமயத்தில் அவர்கள் மீண்டும் வீடுகளை இடித்தால் எல்லாம் பயனற்றதாகிவிடும்." என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், வீடுகளை இடிக்கும் ரயில்வேயின் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து தற்போதைய நிலையை அடுத்த 10 நாட்களுக்கு தொடருமாறு உத்தரவு பிறப்பித்தனர். இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், ஒரு வாரம் கழித்து இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக தெரிவித்தது.












Click it and Unblock the Notifications