உச்சநீதிமன்ற நெருக்கடி- பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை மசோதாவுக்கு ஆளுநர் ரவி உடனே ஒப்புதல்!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதியதாக கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 2 ரிட் மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. ஆளுநர் ரவிக்கு எதிராக அடுத்தடுத்த வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த நிலையில் அண்மையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், அரசின் கோப்புகள் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதும் இல்லை அவற்றை விரைவாக திருப்பி அனுப்புவதும் இல்லை; இதற்கு மாறாக கிடப்பில் போட்டுவைத்துவிடுகிறார்; இந்த மசோதாக்களுக்கும் கோப்புகளுக்கும் விரைவாக ஒப்புதல் தர உத்தரவிட வேண்டும் என்பது ஒரு ரிட் மனு. இந்த மனுவை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் விசாரித்து, நிலைமை மிகவும் தீவிரமானதாக இருக்கிறது என கவலை தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறுக்கீடு செய்வதாக மற்றொரு ரிட் மனுவையும் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி தலைவரை சேர்க்க வேண்டும் என்கிற ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு மனுக்களும் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு இருதரப்புக்கும் இடையே ஒருவாரத்தில் தீர்வை ஏற்படுத்த வேண்டும்; அப்படி இல்லை என்றால் உச்சநீதிமன்றமே தீர்வை உருவாக்கும் என நீதிபதி பர்திவாலா பெஞ்ச் கடுமையாக அறிவுறுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூடுதல் மனுவையும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களுடன் சேர்த்து விசாரிக்க தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து நெருக்கடி தரும் வகையில் மனுக்களைத் தாக்கல் செய்து வரும் நிலையில் பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அண்மைய மசோதாவுக்கு தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இது அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications