வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு... அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக தடை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: கோவில் ஆகம விதிகளின் படி தேர்ச்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக தடை இல்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகள் 1970களில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. தமிழ்நாடு அரசே ஆகம பயிற்சி கொடுத்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராகவும் நியமித்தது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற உடன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டனர். இதனை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனாலும் நீதிமன்றங்கள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை உறுதி செய்திருக்கின்றன.

இதனிடையே சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் பணியிடங்களை நிரப்ப 2018-ல் கோவில் நிர்வாகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் அந்த அறிவிப்புக்கு எதிராக பரம்பரை அர்ச்சகர் முத்து சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அர்ச்சகர்கள் நியமனத்தில் ஜாதியை பார்க்க கூடாது; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து முத்து சுப்ரமணிய குருக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து ஜாதியினரும் அர்ச்ச்கராவதற்கு எந்த தடையும் இல்லை. கோவில் ஆகம விதிகளைப் படித்து தேர்ச்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications