ஆளுநர் தமிழிசைக்கு எதிரான தெலங்கானா அரசு வழக்கு.. மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஆளுநருக்கு எதிரான தெலங்கானா அரசின் வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்தத ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த சூழலில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த வாரத்திற்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநரும், முதலமைச்சரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே தெலங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினர்.

உச்சநீதிமன்றத்தை நாடிய தெலங்கானா அரசு
மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தமிழிசைக்கு உத்தரவிடக்கோரி தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், அசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா, நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலைவாய்ப்பு திருத்த மசோதா, வனவியல் பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் பணி நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நிலுவையில் 10 மசோதாக்கள்
இந்த மசோதாக்களில் 7 மசோதாக்கள் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் தற்போது வரை நிலுவையில் உள்ளது. மற்ற 3 மசோதாக்கள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு இதுவரை தெலுங்கானா மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறி ஆளுநர் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு
கடந்த வாரத்தில் இந்த ரிட் மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையிட்ட மூத்த வழக்கறிஞர், 10 மசோதாக்கள் ஆளுநர் தமிழிசையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால் அவசர வழக்காக இதனை விசாரிக்க வலியுறுத்தினார். அதையடுத்து தெலுங்கானா அரசின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்த நிலையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் முன் இன்று தெலங்கானா அரசின் ரிட் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications