"விதிகளில் தெளிவு இல்லை.."யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த புதிய விதிகளை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விதிகளில் தெளிவில்லை என சொல்லி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் வரை முந்தைய 2012 விதிகளே அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது. 2012ல் இருந்த பழைய விதிமுறைகளுக்குப் பதிலாக இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டது. எஸ்சி, எஸ்டி பிரிவனர் மட்டுமின்றி ஓபிசி பிரிவினர் மற்றும் பாலினச் சிறுபான்மையினரும் இதில் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இடைக்கால தடை
இருப்பினும், இது பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகச் சொல்லி சில இடங்களில் போராட்டங்கள் நடந்தது. மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே யுஜிசி புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யுஜிசி வெளியிட்ட புதிய விதிகளுக்கு எதிரான வழக்கில், விதிகள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் இதனால் விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று குறிப்பிட்டது.
பின்னணி
யுஜிசி இந்த மாதத் தொடக்கத்தில் புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பாகுபாட்டுப் புகார்களை விசாரிக்கவும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சூழலை மேம்படுத்தவும் சமத்துவக் குழுக்களை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த குழுக்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
நீதிபதிகள் கருத்து
யுஜிசி இந்த விதிகளுக்கு எதிராகச் சில மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழிகாட்டுதல்கள் "சமூகத்தைப் பிளவுபடுத்தும் திறன் கொண்டவை" மற்றும் "கடுமையான தாக்கத்தை" ஏற்படுத்தக்கூடியவை என்பதால், இதில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியம் என்று குறிப்பிட்டனர்.
இந்த புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், இதில் முடிவு எட்டப்படும் வரை 2012ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கும் யுஜிசி அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமூகத்தை பிளவுபடுத்தும்
வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, "இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை என்றால், இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.. சமூகத்தைப் பிளவுபடுத்தும், மேலும் கடுமையான தாக்கத்தை உருவாக்கும்.. மேலும், இந்த விதிகள் தெளிவற்றது என்பது போலத் தோன்றுகிறது. எனவே, அழை தவறாகப் பயன்படுத்தப்படாத வகையில் வடிவமைக்க நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications