பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு மே.10 வரை உச்சநீதிமன்றம் இறுதி கெடு
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக வரும் 10-ந் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது. அப்படி மத்திய அரசு விடுதலை செய்யாவிட்டால் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள். இந்த வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டதை கடுமையாக விமர்சித்தது.

உச்சநீதிமன்றம் அதிருப்தி
தமிழக ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளனை ஜாமீனில் விடுதலை செய்தது. மேலும் இவ்வழக்கின் விசாரணையின் போது பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுதலை செய்யலாம் என்பதே தங்களது நிலைப்பாடு என திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். மேலும் தமிழக அமைச்சரவையானது 7 தமிழரை விடுதலை செய்யலாம் என முடிவு எடுத்தது. இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவிக்காமல் இதனை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்ததற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ஆளுநரின் செயல் கூட்டாட்சி முறையையே சீரழிக்கும் என காட்டமாக கூறினர்.

மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகள்
இதனையடுத்து இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தது. அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு ஏன் இன்னமும் முடிவு எடுக்கவில்லை? பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆவணங்கள் எங்கே?
மேலும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். அத்துடன் 7 தமிழரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை முடிவு தொடர்பாக ஜனாதிபதிக்கு தமிழக ஆளுநர் அனுப்பிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசுக்கு இறுதி கெடு
இதன்பின்னர், வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 10) பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். அப்படி மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உத்தரவிட நேரிடும் என்றனர் நீதிபதிகள். அப்போது மத்திய அரசு தரப்பில், பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கிற்து; ஆளுநருக்கு எதிராக வாதிட முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்படி நீங்கள் வாதிட முடியாது எனில் பேரறிவாளனை நாங்கள் விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என்றனர். இந்த வாதங்களைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமைக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications