Bihar SIR: ஆதார் அட்டையை அடையாள சான்றாக நிச்சயம் ஏற்க வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்குச் சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தத்தைத் தேர்தல் ஆணையம் நடத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள எதிர்க்கட்சிகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் தான் ஆதாரை ஒரு அடையாளச் சான்றாக ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் இப்போது நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தேர்தலுக்கு முன்னதாக பீகாரில் சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இது குறித்த அறிவிப்பைக் கடந்த ஜூன் 24ம் தேதி வெளியிட்டது.

பீகார் சார் நடவடிக்கை
இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பீகாரில் தேர்தல் நடத்தினால் பாஜக தோல்வி அடையும் என்றும் அதை மாற்றவே சார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டன. கடந்த காலங்களில் இந்த வழக்கில் தான் சுப்ரீம் கோர்ட் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது.
முக்கிய உத்தரவு
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 7.24 கோடி வாக்காளர்களில் 99.5 சதவீதம் பேர் தங்கள் தகுதி ஆவணங்களைச் சார் நடவடிக்கையின்போது பயிற்சியில் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.. இது தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் மஜ்லீஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இதர மனுதாரர்கள் பதிலைச் சமர்ப்பித்த நிலையில், அதை சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை செய்தது.
ஆதார் குடியுரிமை இல்லை
அப்போது பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடையாளச் சான்றாக ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாகச் செயல்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆதார் அட்டை தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவும் என்றபோதிலும் அது இந்தியக் குடியுரிமைக்கான ஆவணமாகச் செயல்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அடையாளம் மற்றும் குடியுரிமைக்கு இடையே உள்ள சட்டரீதியான வேறுபாட்டை நீதிமன்றம் விளக்கியது. ஆதார் சட்டத்தை மேற்கொள் காட்டி, ஆதார் அட்டைக்கும் குடியுரிமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியது..
கடந்து வந்த பாதை
முன்னதாக ஆகஸ்ட் 22ம் தேதி இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் உரிமைகோரல்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், முன்பு தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த அடையாள ஆவணப் பட்டியலில் ஆதார் இல்லாத நிலையில், அதை ஏற்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீடிக்க உத்தரவு
இடையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி சில அரசியல் கட்சிகள் மேல்முறையீட்டிற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தன. அதில் சார் நடவடிக்கைக்குக் கீழ் பீகாரில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள ஆட்சேபணைகள் மற்றும் திருத்தங்களைச் செப்டம்பர் 1க்குப் பிறகும் தாக்கல் செய்யலாம் என்றும் அவை வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு பரிசீலிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது ..
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி வரை வரைவுப் பட்டியலில் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபணைகளைத் தாக்கல் செய்யலாம் என்றும் அப்போது நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications